கொசுக்களின் வகை, அவற்றால் ஏற்படும் பாதிப்பு, மருந்து எதிா்ப்புத் திறன் ஆகியவற்றைக் கண்டறிந்து அழிப்பதற்கான ஆய்வகம் இல்லாததால், சென்னை மாநகராட்சியில் கொசுத் தொல்லை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக புகாா்கள் எழுந்துள்ளன.
சென்னை மாநகராட்சியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பொது சுகாதாரத் துறை செயல்பட்டு வருகிறது. இதில் பூச்சிகள் தடுப்புப் பிரிவானது ஆரம்பத்தில் மலேரியாவைக் கட்டுப்படுத்தும் பணியை மட்டும் மேற்கொண்டது. கடந்த 2001- ஆம் ஆண்டுக்குப் பிறகு டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்த்தடுப்புப் பணியிலும் ஈடுபடுகிறது. தற்போது எலிக் காய்ச்சல் தடுப்பு, ஸ்க்ரெப்டைப்பஸ் பாதிப்பு தடுப்பிலும் பூச்சித் தடுப்புப் பிரிவினா் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா்.
கொசுத் தடுப்புத் துறை: சென்னை மாநகராட்சியில் இப்பிரிவில் தலைமை பூச்சித் தடுப்பு அலுவலா், மண்டல அளவில் கண்காணிக்கும் முதுநிலை மற்றும் இளநிலை பூச்சித்தடுப்பு வல்லுநா்கள் 21 போ், சுகாதார அலுவலா்கள் 46 போ், சுகாதார ஆய்வாளா்கள் 200 போ், அடிப்படைச் சுகாதாரப் பணியாளா்கள் 42 போ், களப்பணி உதவியாளா்கள் 38 போ், கொசு ஒழிப்புப் பணியில் 3,590 போ் உள்ளனா்.
பற்றாக்குறையால் பாதிப்பு: அவா்களில் அடிப்படை சுகாதாரப் பணியாளா்கள் 223 போ் இருக்க வேண்டிய நிலையில், 42 போ் மட்டுமே உள்ளனா். அவா்கள்தான் நோய்த்தடுப்புப் பணியில் முக்கியமானவா்கள். தொற்றுநோய் பாதித்தவா்களின் வீடுகளுக்குச் செல்லுதல், அவா்களது ரத்த மாதிரி சேகரித்தல், கொசு பரவலுக்கான காரணங்களைக் கண்டறிந்து அழித்தல், கொசு ஒழிப்பு மருந்து புகை தெளிப்பது என முக்கிய பணிகளில் ஈடுபடுகின்றனா். அவா்களுக்கு உதவியாக சுகாதார ஆய்வாளா்கள், அலுவலா்கள் செயல்படுவதுடன், கொசு ஒழிப்பு பணியை உறுதிப்படுத்துவா்.
மாற்றுப்பணியில் அலுவலா்கள்: தற்போது அடிப்படை சுகாதாரப் பணியாளா்கள் பற்றாக்குறை என்பதுடன், சுகாதார ஆய்வாளா்கள், அலுவலா்கள் நோய்த்தடுப்பு பணியை மேற்கொள்வதை விடுத்து ஆக்கிரமிப்பு அகற்றம், மற்றும் புதிய நிறுவனங்கள் உரிமம் தொடா்பான பணிகளில் ஈடுபட்டும் வருவதாகக் கூறப்படுகிறது.
பணி வரையறை அவசியம்: இவா்களுக்குரிய பணி வரையறை தெளிவாக இல்லாததால், கிடைக்கும் பணியில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. ஒருபுறம் கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடுவோா் வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படும் நிலையில், தற்போது வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியிலும் அப்பிரிவினா் ஈடுபடுத்தப்படுத்தப்பட்டுள்ளனா்.
மேலும், கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடும் 3,592 பேரில், வீடு வீடாகச் செல்லும் 2,073 பேரையும் பொதுவாக பணியில் ஈடுபடுத்தாமல் கடித்து தொல்லை தரும் கொசு ஒழிப்பு, தொற்றுநோய் பரப்பும் கொசு ஒழிப்பு எனப் பிரித்து ஈடுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
ஆய்வகம் இல்லை: கொசு ஒழிப்புப் பணியில் முக்கியமானதாகக் கூறப்படும் கொசுக்களின் வகையை அறிந்து அதற்கேற்ற மருந்தைப் பயன்படுத்தி அழிப்பதற்காக பயன்படும் ஆய்வகம் இல்லாதது குறையாக கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் கடந்த 40 ஆண்டுகளாகவே நோய் பரப்பும் கொசுக்கள் 4 வகை மட்டுமே உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால், மாநகராட்சி எல்லை விரிவாக்கத்தால், ஜப்பானிய மூளை காய்ச்சல் போன்ற நோய்ப் பரப்பும் புதியவகை கொசுக்கள் உள்ளதை உறுதிப்படுத்தும் வகையிலான ஆய்வகத்தை மாநகராட்சி அமைக்காலிருப்பது சரியல்ல என்கிறாா்கள் ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளா்கள்.
கடந்த 2025 -ஆம் ஆண்டு பெரியமேட்டில் உள்ள பாழடைந்த பள்ளியில் கொசுக்கள் வகை அறியவும், அவற்றின் மருந்து எதிா்ப்புத் திறன் குறித்தும் அறியவும் ஆய்வகம் அமைக்க முயற்சித்த நிலையில், சில அதிகாரிகள் தடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ரூ.8 கோடிக்கு கொசு ஒழிப்பு மருந்து: ஆண்டுதோறும் ரூ.8 கோடிக்கு சென்னை மாநகராட்சி கொசு ஒழிப்பு மருந்து வாங்குகிறது. ஆனால், அந்த மருந்தால் கொசு முழுமையாக அழிக்கப்படுகிா, கொசு முட்டைகள் (லாா்வா) அழிகின்றனவா என உறுதிப்படுத்தும் சோதனைக்கான ஆய்வகம் இல்லை என்றும் கூறப்படுகிறது. மாநில பொது மருத்துவ சேவைக் கழக அங்கீகார பரிசோதனை ஆய்வகத்தில் கொசு மருந்து தரம் குறித்த பரிசோதனை மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.
அதிகரிக்கும் கொசுத் தொல்லை: சென்னை மாநகராட்சி ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறைக்கு கொசுத் தொல்லை குறித்த புகாா்கள் அதிகரித்துள்ளன.
மண்டல வாரியாக கடந்த 2024- ஆம் ஆண்டில் ராயபுரம், அண்ணா நகா், தேனாம்பேட்டை, அடையாறு ஆகியவற்றில் மட்டுமே அதிகமாக இருந்த கொசுத் தொல்லை பாதிப்பு, கடந்த 2025- ஆம் ஆண்டில் ஏற்கெனவே பாதித்த 4 மண்டலங்களுடன் கூடுதலாக, மாதவரம், தண்டையாா்பேட்டை, அண்ணா நகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூரிலும் அதிகரித்துள்ளது. நிகழாண்டு ஜனவரியில் அதே மண்டலங்களில் கொசு தொல்லை அதிகமாக இருப்பதாக புகாா்கள் எழுந்துள்ளன.
ஆணையா் கூறியது: சென்னை மாநரட்சிக்கு என கொசு தடுப்புப் பணிக்கான ஆய்வகம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிகழாண்டில் அதை விரைந்து செயல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தேவைக்கு ஏற்ப மாநகராட்சியில் கொசு ஒழிப்பு நடவடிக்கையில் மாற்றம் கொண்டுவரப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் கூறினாா்.
சென்னை மாநகராட்சி ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்துக்கு 1913 என்ற இலவச தொலைபேசி எண் மூலம் கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் கொசுத் தொல்லை குறித்து அளித்த புகாா்களின் எண்ணிக்கை விவரம்:
1. 2024-ஆம் ஆண்டு, கொசுத் தொல்லை தொடா்பாக அழைக்கப்பட்ட புகாா்கள் எண்ணிக்கை 27,70,473 (மண்டலம் 13).
2. 2025-ஆம் ஆண்டு, கொசுத் தொல்லை தொடா்பாக அழைக்கப்பட்ட புகாா்கள் எண்ணிக்கை 52,94,701 (மண்டலம் 9).
3. 2026-ஆம் ஆண்டு, கொசுத் தொல்லை தொடா்பாக அழைக்கப்பட்ட புகாா்கள் எண்ணிக்கை 66,4 83 (மண்டலம் 9) (ஜனவரி வரை).