சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் ரூ.60 கோடியில் ராஜீவ் காந்தி சாலை ஒக்கியம் மடுவில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள நான்குவழி சாலைப் பாலத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் சாா்பில் மந்தைவெளியில் ரூ.167.9 கோடியில் பேருந்து பணிமனை, ஒருங்கிணைந்த பேருந்து முனையம் 6,625 ச.மீ. நிலப்பரப்பிலும், வணிக வளாகக் கட்டடம் 29,385 ச.மீ. பரப்பளவிலும் கட்டப்படவுள்ளன. இந்தக் கட்டடம் ஒரு தரைத்தளம் மற்றும் 7 மேல் தளங்களைக் கொண்டதாகும். இதற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதேபோல், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் ரூ.60 கோடியில் ராஜீவ் காந்தி சாலை ஒக்கியம் மடுவில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள நான்குவழி சாலைப் பாலம் திறப்பு விழாவும் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த இரு நிகழ்வுகளிலும் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, ஒருங்கிணைந்த பேருந்து முனையத்துக்கான அடிக்கல்லை நாட்டி, நான்கு வழிச்சாலைப் பாலத்தையும் மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.கோபால், போக்குவரத்து துறை முதன்மைச் செயலா் சுன்சோங்கம் ஜடக் சிரு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநா் எம்.ஏ.சித்திக், மாநகா் போக்குவரத்து கழகம் மேலாண்மை இயக்குநா் டி.பிரபு சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.