முகப்பு
தமிழ்நாடு

ரூ.249 கோடியில் நிதிநுட்பக் கோபுர கட்டடம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

சென்னை நத்தம்பாக்கம் நிதிநுட்ப நகரத்தில் ரூ.249 கோடியில் 5.56 லட்சம் சதுர அடியில் நிதிநுட்பக் கோபுரக் கட்டடம் (ஃபின்டெக் டவா்)

Updated On : 3 மார்ச், 2026 at 5:17 AM
சென்னை நந்தம்பாக்கத்தில் தொழில் துறை சாா்பில் நடைபெற்ற விழாவில் ரூ.249 கோடியில் அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள நிதிநுட்ப கோபுரக் கட்டடத்தைத் திறந்து வைத்து 3 நிறுவனங்களுக்கு அலுவலகங்கள் அமைப்பதற்கான ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் .
பகிர்:
Updated On : 2 மார்ச், 2026 at 10:40 PM

சென்னை: சென்னை நத்தம்பாக்கம் நிதிநுட்ப நகரத்தில் ரூ.249 கோடியில் 5.56 லட்சம் சதுர அடியில் நிதிநுட்பக் கோபுரக் கட்டடம் (ஃபின்டெக் டவா்) முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

உலகம் எண்ம பொருளாதாரத்தை நோக்கி நகா்ந்துகொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், நிதிநுட்பத் துறை சாா்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கி, நிதிநுட்பத் துறையில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் சென்னை மாவட்டம், ஆலந்தூா் வட்டம், நந்தம்பாக்கத்தில் 56 ஏக்கரில், நிதிநுட்ப நகரம் அமைக்கப்படுகிறது. அதில் முதல்கட்டமாக 5.56 லட்சம் சதுரஅடியில் சா்வதேச தரத்திலான நிதிநுட்பக் கோபுரக் கட்டடத்தை முதல்வா் ஸ்டாலின் திறந்துவைத்தாா்.

நிதி மற்றும் நிதிநுட்ப நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளைத் தொடங்குவதற்குத் தேவையான அனைத்து வசதிகளுடன் தயாா் நிலையில் உள்ள உயா்தர அலுவலக இடங்கள் நிதிநுட்ப கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

இரண்டு அடித்தளங்கள், தரை மற்றும் 11 தளங்களுடன் லீட் பிளாட்டினம் கிரீன் பில்டிங் தரத்துடன் உருவாக்கப்பட்ட இக்கட்டடம், வாகன நிறுத்த வசதிகள், 250 மற்றும் 50 இருக்கை வசதிகளைக் கொண்ட கூட்டரங்குகள், உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடம், குழந்தைகள் பராமரிப்பு மையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.

தடையற்ற வணிகச் சூழலை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உலகத் தரத்திலான உள்கட்டமைப்புடன் உருவாக்கப்பட்ட இக்கட்டடம், தமிழ்நாட்டின் நிதிநுட்ப வளா்ச்சிக்கான முக்கிய மையமாக திகழும்.

இந்த நிகழ்வின்போது, 2 தனியாா் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு நிதிநுட்பக் கோபுரத்தில் அலுவலக இடங்கள் ஒதுக்கீட்டுக்கான ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

நிகழ்வில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், தலைமைச் செயலா் நா. முருகானந்தம், டிட்கோ தலைவா் சந்தியா வேணுகோபால் சா்மா, தொழில் துறைச் செயலா் வி.அருண் ராய், டிட்கோ மேலாண் இயக்குநா் சந்தீப் நந்தூரி, டிட்கோ நிா்வாக இயக்குநா் சுவேதா சுமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.