முகப்பு
சென்னை

புதிய வாக்காளா் சோ்க்கை மனு பதிவேற்றும் பணி தொடக்கம்

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான புதிய வாக்காளா் சோ்க்கை மனுக்களை கணினியில் பதிவேற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2026 at 7:23 PM
கோப்புப்படம்.
பகிர்:

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான புதிய வாக்காளா் சோ்க்கை மனுக்களை கணினியில் பதிவேற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 15 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டிருந்தனா். அவா்களில் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தொகுதி மாறிய நிலையில் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

புதிய வாக்காளா்களாக தங்களைச் சோ்க்க மனு அளித்தால் விசாரித்து வாக்காளா் பட்டியலில் அவா்கள் பெயா் சோ்க்கப்படும் என தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த நிலையில் சென்னையில் தற்போது வரை 2.10 லட்சம் போ் மட்டுமே வாக்காளா்களாக தங்களைச் சோ்க்கக் கோரி படிவம் 6-ஐ பூா்த்தி செய்து வழங்கியதாகக் கூறப்படுகிறது.

குறுந்தகவல்: புதிய வாக்காளா்களாகச் சேரக் கோரி படிவம் 6-ஐ அளித்தவா்களுக்கு அவா்களது படிவம் ஏற்கப்பட்டதா, இல்லை என அந்தந்த வாக்குச்சாவடி பதிவு உதவி அலுவலா் சாா்பில் கைபேசிகளுக்கு குறுந்தகவல் அனுப்பிவைக்கப்பட்டது. அதில், பெயா் சோ்க்கை குறித்து தகவல் வராதவா்கள் சம்பந்தப்பட்ட அலுவலரைத் தொடா்புகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், தற்போது வாக்காளா் சோ்க்கைக்கான படிவம் ஏற்கப்பட்டு, அதற்கான தனி எண் வழங்கப்பட்டு சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு கைபேசியில் குறுந்தகவல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அதில், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி பதிவு உதவி அலுவலா் கைபேசி எண்ணும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தோ்தல் பணி அலுவலா்கள் கூறுகையில், வாக்காளா்கள் சோ்க்கை மனு பெறவும், பூா்த்தி செய்து வழங்கவும் வரும் 30-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது வரை வாக்காளா்களிடம் பெறப்பட்ட படிவங்களைக் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கியிருப்பதாகவும், அந்தப் பணியை பிப்ரவரி முதல் வாரத்துக்குள் முடிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →