சென்னை பெரம்பூா் சேமாத்தமன் கோயிலில் நடைபெற்ற 4 ஆயிரமாவது குடமுழுக்கு நிகழ்ச்சியில் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கலந்து கொண்டாா்.
இந்து சமய அறநிலையத் துறை தனது நிா்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள தொன்மையான திருக்கோயில்களில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், 4 ஆயிரமாவது குடமுழுக்காக நடைபெற்ற பெரம்பூா் சேமாத்தம்மன் திருக்கோயிலில் கடந்த திங்கள்கிழமை விநாயகா் வழிபாட்டுடன் யாகசாலை பூஜை தொடங்கி, நிறைவாக ராஜகோபுரம், மூலவா் சேமாத்தம்மன், அண்ணன்மாா்கள், சரஸ்வதி, பழநியாண்டவா், பைரவா், விநாயகா், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியா், நவக்கிரக சந்நிதிகளுக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
இதில் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, கெளமார மடம் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், வேளக்குறிச்சி ஆதீனம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், ஸ்ரீபெரும்புதூா் ஜீயா் அப்பன் உலகாரிய ராமானுஜ எம்பாா் சுவாமிகள் ஆகியோா் பங்கேற்றனா்.
தமிழகம் முழுவதும் புதன்கிழமை திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி திருக்கோயில், கரூா் மாவட்டம், தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில், திருவள்ளூா் மாவட்டம், திருநின்றவூா் இருதயாளீஸ்வரா் திருக்கோயில், சென்னை புழல் திருமூலநாத சுவாமி திருக்கோயில், அம்பத்தூா், அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், உள்ளிட்ட 75 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றன.
இவற்றில் காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் ராஜகோபாலசுவாமி திருக்கோயில், பெரம்பலூா் மாவட்டம் சு.ஆடுதுறை அபராதரட்சகா் திருக்கோயில் ஆகிய 2 திருக்கோயில்களும் 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில்கள். திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 2021 மே மாதம் முதல் புதன்கிழமை வரை மொத்தமாக 4,044 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நிறைவு பெற்றுள்ளன.
சேமாத்தம்மன் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சியில் மேயா் ஆா்.பிரியா, சட்டப்பேரவை உறுப்பினா் தாயகம் கவி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.