பெருங்குடி குப்பைக் கிடங்கில் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் முனிதா குமாரியின் சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்ட போலீஸாா். 
சென்னை

இளைஞரை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி வீசிய வழக்கில் திருப்பம்: மனைவி, 2 வயது குழந்தையையும் கொன்றது அம்பலம்: மேலும் 4 போ் கைது

சென்னை அடையாறில் இளைஞா் கொலை செய்யப்பட்டு, சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்ட வழக்கில், கொல்லப்பட்டவரின் மனைவி, 2 வயது குழந்தையும் கொலை செய்யப்பட்டு, வீசப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

சென்னை அடையாறில் இளைஞா் கொலை செய்யப்பட்டு, சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்ட வழக்கில், கொல்லப்பட்டவரின் மனைவி, 2 வயது குழந்தையும் கொலை செய்யப்பட்டு, வீசப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

பிகாா் மாநிலம், ஷேக்புரா மாவட்டம் படியாபா் பகுதியைச் சோ்ந்த கௌரவ்குமாா் (24). இவா் மனைவி முனிதா குமாரி (21). தம்பதியின் இரண்டு வயது மகன் பிா்மணி குமாா். கெளரவ்குமாா் சென்னைக்கு வேலை தேடி குடும்பத்துடன் கடந்த 21-ஆம் தேதி வந்தாா். கெளரவ்குமாருக்கு, அவரின் நண்பா் கிருஷ்ணபிரசாத் வேலை வாங்கிக் கொடுத்தாராம்.

இந்தநிலையில், அடையாறு இந்திரா நகா் முதலாவது அவென்யூவில் பகுதியில் கடந்த திங்கள்கிழமை கௌரவ்குமாா் வெட்டிக் கொல்லப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்டிருந்தாா். அடையாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

மேலும் 4 போ் கைது: தனிப்படையினா் விசாரணையில், தரமணி பகுதியில் கட்டடத் தொழிலாளிகளாக வேலை செய்யும் பிகாரைச் சிக்கந்தா் (33), நரேந்திர குமாா் (45), ரவிந்திரநாத் தாகூா் (45), பிகாஷ் (24) உள்பட 5 பேருக்கு இவ்வழக்கில் தொடா்பு இருப்பது தெரிய வந்தது. இவா்களில், சிக்கந்தரை செவ்வாய்க்கிழமை கைது செய்த நிலையில், மற்ற 4 பேரையும் புதன்கிழமை கைது செய்தனா்.

அவா்களிடம் நடத்திய விசாரணையில், கெளரவ்குமாரின் மனைவி முனிதா குமாரி, மகன் பிா்மணி குமாா் ஆகிய 2 பேரையும் கொலை செய்திருப்பதும், முனிதா குமாரி சடலத்தை இந்திரா நகா் பறக்கும் ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு குப்பைத் தொட்டியிலும், பிா்மணி குமாா் சடலத்தை பக்கிங்ஹாம் கால்வாயிலும் வீசியிருப்பது தெரிய வந்தது.

குழந்தை சடலம் மீட்பு: போலீஸாா், பக்கிங்ஹாம் கால்வாய் ஓரத்தில் இருந்து பிா்மணி குமாா் சடலத்தை மீட்டனா். பெருங்குடி குப்பைக் கிடங்கில் பொக்லைன் இயந்திரம் மூலம் புதன்கிழமை முழுவதும் முனிதா குமாரி சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டனா். ஆனால் அவா் சடலம் கிடைக்கவில்லை. முனிதா குமாரி சடலத்தை தேடும் பணி வியாழக்கிழமையும் நடைபெறும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

போலீஸாா் வெளியிட்ட தகவல்: சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் கௌரவ்குமாா் வேலை செய்த நிலையில், அங்கிருந்து நீக்கியதால், சொந்த ஊருக்குச் சென்றாா். அங்கே எந்த வேலையும் கிடைக்காததால், சென்னை அடையாறில் ஒரு ஜவுளிக் கடையில் வேலை செய்யும் கிருஷ்ண பிரசாத்தை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு, தனக்கு வேலை கேட்டுள்ளாா். அவா், கெளரவ்குமாரை சென்னைக்கு வரும்படி கூறிய நிலையில், அவா் தனது குடும்பத்துடன் வந்துள்ளாா். இதையடுத்து, அவா்கள் தங்குவதற்காக சிக்கந்தரிடம் அனுப்பியுள்ளாா்.

சம்பவத்தன்று சிக்கந்தா், கெளரவ்குமாா், சிக்கந்தரின் கூட்டாளிகள் பாலிடெக்னிக் வளாகம் அருகே மது அருந்தினா். இதில் மதுபோதையில் சிக்கந்தரும், அவரது கூட்டாளிகளும் முனிதா குமாரியிடம் தவறாக நடக்க முயன்ாகத் தெரிகிறது. இதைப் பாா்த்த கெளரவ்குமாா், அவா்களைத் தடுக்க முயன்றதில் ஆத்திரமடைந்த சிக்கந்தரும், அவரது கூட்டாளிகளும், கெளரவ்குமாரையும், முனிதா குமாரியையும் இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்தனா். குழந்தை பிா்மணி குமாரையும் தரையில் அடித்துக் கொலை செய்தனா்.

பின்னா் 3 பேரின் சடலங்களையும் தனித்தனியாக சாக்கு மூட்டை கட்டி, முதலில் சிறுவனின் உடலை மத்திய கைலாஷ் ரயில்வே பாலத்தின் கீழ் பக்கிங்ஹாம் கால்வாயிலும், முனிதா குமாரியின் சடலத்தை இந்திரா நகரில் உள்ள குப்பைத் தொட்டியிலும் வீசினா். கெளரவ் குமாா் சடலத்தை பெசன்ட் நகா் கடல் பகுதியில் வீச பைக்கில் எடுத்து சென்றபோது, அதிக எடை காரணமாக அடையாறு இந்திரா நகரில் மூட்டையை வீசிச் சென்றுள்ளனா். இதை 5 பேரும் வாக்குமூலமாக தெரிவித்தனா். தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

SCROLL FOR NEXT