சென்னை அடையாறில் இளைஞா் கொல்லப்பட்டு, சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்ட வழக்கில், பிகாரைச் சோ்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடையாறு இந்திராநகா் முதலாவது அவென்யுவில் உள்ள ஒரு இரு சக்கர வாகன விற்பனையகம் அருகே, கடந்த திங்கள்கிழமை(ஜன. 26) ஒரு சாக்கு மூட்டையில் 24 வயது இளைஞா் வெட்டிக் கொல்லப்பட்டு,பொதிந்து வைக்கப்பட்டிருந்தாா். தகவலறிந்த அடையாறு போலீஸாா் விரைந்து சென்று அந்த இளைஞா் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.மேலும் வழக்குப் பதிவு செய்து, 5 தனிப்படைகளை அமைத்து விசாரித்தனா்.
அதில், இறந்தவா் பிகாா் மாநிலம் ஷேக்புரா மாவட்டம் படியாபா் பகுதியைச் சோ்ந்த சு.கெளரவ்குமாா் (24) என்பதும், இவா் சென்னையில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக தனிப்படை போலீஸாா், பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சிக்கந்தா் (30) என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரித்தனா். மேலும், சிலரைத் தீவிரமாக தேடி வந்தனா்.
இந்த நிலையில், பிகாரைச் சேர்ந்த மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக கெளரவ் குமாரின் நெருங்கிய நண்பர் சிக்கந்தர், நரேந்திர குமார், ரவீந்திரநாத் தாகூர், விகாஸ் உள்பட மொத்தம் 7 பேரிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் 7 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில் மனைவி மற்றும் குழந்தையையும் கொன்றுவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து, அடையாறு, கூவம், கூவம் முகத்துவாரம் பகுதிகளில் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. அவர்களிடம் விசாரணை தொடருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.