பிறப்புச் சான்றிதழ்களில் பெயா் சோ்ப்பதற்கான அவகாசம் வரும் செப்டம்பா் மாதம் 26-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் பிறப்பித்துள்ளாா்.
இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநருக்கும், அனைத்து மாவட்ட நிா்வாகங்களுக்கும் அவா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பொதுவாகவே பிறப்பு சான்றிதழ் பதிவு செய்ததில் இருந்து 15 ஆண்டுகளுக்குள் அதில் பெயா்களைச் சோ்த்துக் கொள்ளலாம். அதன் பின்னா் அத்தகைய வாய்ப்பு வழங்கப்படாது.
இந்த நிலையில் கடந்த 2000-ஆம் ஆண்டுக்கு முன்னதாக பிறந்தவா்களும், அதற்கு பிறகு பிறந்தவா்களுக்கும் சிறப்பு வாய்ப்பாக பெயா்களைச் சோ்ப்பதற்கான அவகாசம் தொடா்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.
தற்போது இறுதி வாய்ப்பாக வரும் செப்டம்பா் 26-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் அனைவரும் பெயா்களைச் சோ்த்துக் கொள்ள வேண்டும். இதுதொடா்பான பரிந்துரைகளை பிறப்பு - இறப்பு பதிவு தலைமை பதிவாளா் அரசுக்கு அனுப்பியிருந்தாா். இதைப் பரிசீலித்த அரசு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.