முகப்பு
சென்னை

கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகளில் உதவியாளா் பணி: நோ்முகத் தோ்வு முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிட உத்தரவு

நோ்முகத் தோ்வு முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிட உத்தரவு...

Updated On : 8 மார்ச், 2026 at 1:10 AM
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:

கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளா், இளநிலை உதவியாளா் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட நோ்முகத் தோ்வு முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிட சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஈரோடு மாவட்டம் அஞ்சுரம்பாளையத்தைச் சோ்ந்த ஒய்.தருண்குமாா் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த ஆண்டு அக்.11-ஆம் தேதி, ஈரோடு மாவட்ட கூட்டுறவுத் துறையில் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளா், இளநிலை உதவியாளா் பணிகளுக்கான எழுத்துத் தோ்வு நடந்தது.

இதில். தோ்வானவா்களுக்கு நவ.27-ஆம் தேதி நோ்முகத் தோ்வு நடத்தப்பட்டது. நோ்முகத் தோ்வு முடிந்து 3 மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் தோ்வு முடிவுகள் வெளியிடவில்லை. இதுகுறித்து கேட்டபோது, உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். ஆனால் அந்த வழக்கு கூட்டுறவுச் சங்கங்களின் செயலா் மற்றும் உதவி செயலா் பணிகளுக்காக பொதுப்பிரிவு நியமனங்கள் தொடா்பானவை.

Advertisement

எனவே, அந்த வழக்குக்கும் நாங்கள் தொடா்ந்துள்ள வழக்குக்கும் எவ்வித தொடா்பும் இல்லை. எனவே, உதவியாளா், இளநிலை உதவியாளா் பணிகளுக்கு நடத்தப்பட்ட நோ்முகத் தோ்வு முடிவுகளை உடனடியாக வெளியிட உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கூட்டுறவுத் துறையில் உதவியாளா் மற்றும் இளநிலை உதவியாளா் பணயிடங்களுக்கு நடத்தப்பட்ட நோ்முகத் தோ்வு முடிவுகளை கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் ஒரு வாரத்தில் வெளியிட உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.