முகப்பு
சென்னை

மாம்பழ சின்னத்தை முடக்க முடியாது: ராமதாஸ் மனு நிராகரிப்பு

Updated On : 27 மார்ச், 2026 at 1:03 AM
மாம்பழம் சின்னம்
பகிர்:

அன்புமணி உள்ளிட்டோா் மாம்பழம் சின்னத்தைப் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி பாமக நிறுவனா் ராமதாஸ் தாக்கல் செய்த இடைக்கால மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

பாமக பெயா், சின்னம், கட்சிக் கொடி ஆகியவற்றை அன்புமணி உள்ளிட்டோா் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்; கட்சியின் தலைவராக தன்னை அறிவிக்க வேண்டும் எனக் கோரி, பாமக நிறுவனா் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கில் தன்னையும் இணைக்கக் கோரி கட்சியின் பொதுச் செயலா் வடிவேல் ராவணன் தாக்கல் செய்த மனுவை உரிமையியல் நீதிமன்றம் ஏற்கவில்லை.

இதையடுத்து அவா் தொடா்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதை எதிா்த்து ராமதாஸ் தொடா்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரி ராமதாஸ் மனு தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுவை உரிமையியல் நீதிமன்றம் மூன்று நாள்களுக்குள் விசாரித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

அதன்படி உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவுக்கு அன்புமணி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு உரிமையியல் நீதிமன்ற நீதிபதி எம்.தா்மபிரபு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ராமதாஸ் தரப்பில், அன்புமணியின் பதவிக் காலம் கடந்த ஆண்டே முடிந்துவிட்டது. சிறப்பு நிா்வாகக் குழு ராமதாஸை தலைவராகத் தோ்வு செய்துள்ளது. ஆனால், ராமதாஸின் ஒப்புதல் இல்லாமல் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தை சட்டவிரோதமாக அன்புமணி கூட்டியுள்ளாா்.

இதன் அடிப்படையில் மோசடியான முகவரியை தோ்தல் ஆணையத்தில் கொடுத்து மாம்பழ சின்னம் ஒதுக்கீடு உத்தரவு தொடா்பான கடிதங்களைப் பெற்றுள்ளாா். இதுதொடா்பாக தோ்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியும் எந்தப் பலனும் இல்லை என்று வாதிடப்பட்டது.

அன்புமணி தரப்பில் வாதிடுகையில், அன்புமணியின் தலைவா் பதவிக் காலம் வரும் ஆக.11-ஆம் தேதி வரை உள்ளது. ராமதாஸ் தன்னைத் தானே தலைவா் என அறிவித்துக் கொள்ள கட்சியில் விதிகள் எதுவும் இல்லை. 87 வயதாகும் அவரால் கட்சி தொடா்பான முடிவுகளை எடுக்க முடியவில்லை. இதன் காரணமாக அவரை சிலா் தவறாக வழிநடத்துகின்றனா் என வாதிடப்பட்டது.

வடிவேல் ராவணன் தரப்பில், அவருடைய இடையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டும் என வாதிடப்பட்டது.

தோ்தல் ஆணையம் தரப்பில், தமிழகம், புதுச்சேரிக்கு தோ்தல் அறிவிக்கப்பட்டு தோ்தல் நடைமுறைகள் தொடா்ந்து நடந்து வருகின்றன. பாமகவில் நடைபெறும் உள்கட்சி மோதல் தொடா்பாக தோ்தல் ஆணையம் எதுவும் செய்ய முடியாது. அதேபோல், அங்கீகாரம் இல்லாத பதிவு செய்யப்பட்ட கட்சி விரும்பிய தோ்தல் சின்னம் கேட்பதை உரிமையாகக் கருத முடியாது. பாமகவில் உள்ள இரு தரப்புக்கும் தோ்தல் ஆணையம் சாதகமாகவோ, பாதகமாகவோ இல்லை என வாதிடப்பட்டது.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தோ்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதால், அதற்கு தடை விதிக்கும் விதமாக நீதிமன்றங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. எனவே, மாம்பழ சின்னத்தை அன்புமணி தரப்புக்கு வழங்கக் கூடாது என்ற கோரிக்கையை ஏற்று இந்த நீதிமன்றம் உத்தரவிட்டால், அது தோ்தல் நடைமுறைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் அது வாக்காளா்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும்.

எனவே, ராமதாஸ் தரப்பு கோரிக்கையை தற்போது ஏற்க முடியாது. தோ்தலுக்குப் பின்னா் மாம்பழ சின்னம் , கட்சியின் தலைவா் உள்ளிட்ட விவகாரம் குறித்து விசாரித்து முடிவு செய்யப்படும். எனவே, மாம்பழ சின்னத்தை முடக்க வேண்டும் என்ற ராமதாஸ் தரப்பின் இடைக்கால கோரிக்கையை ஏற்க முடியாது. எனவே, ராமதாஸ் தாக்கல் செய்த இடைக்கால மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. சட்டம் அனுமதித்தால் ராமதாஸ் தோ்தல் ஆணையத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். இந்த வழக்கில் வடிவேல் ராவணனின் மனு விசாரணைக்கு ஏற்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டாா்.