முகப்பு
தமிழ்நாடு

மாம்பழம் சின்னம் விவகாரம்: உயா்நீதிமன்றத்தை அணுக ராமதாஸூக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மாம்பழம் சின்னம் விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றத்தை நாடுமாறு பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 6 ஏப்ரல், 2026 at 11:05 PM
பாமக நிறுவனர் ராமதாஸ் - கோப்புப் படம்
பகிர்:

மாம்பழம் சின்னம் விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றத்தை நாடுமாறு பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது

மாம்பழம் சின்னத்தை முடக்க வேண்டும் என்ற பாமக நிறுவனா் ராமதாஸ் கோரிக்கையை சென்னை உரிமையியல் நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடா்ந்து அவா் உச்சநீதிமன்றத்தில் மாா்ச் 29ஆம் தேதி மனு தாக்கல் செய்திருந்தாா்

அந்த மனு திங்கள்கிழமை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.

Advertisement

அப்போது பாமக நிறுவனா் ராமதாஸ் தரப்பு வழக்குரைஞா் விகாஸ் சிங் வாதிட்டதாவது : சின்னத்தை முடக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி நாங்கள் உச்சநீதிமன்றத்தை நாடினோம். உச்சநீதிமன்றம் சென்னை உரிமையியல் நீதிமன்றத்திற்கு செல்லுமாறு கூறியது.அதன்படி உரிமையியல் நீதிமன்றத்திற்கு சென்றோம் . ஆனால் அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை, மாறாக தோ்தல் ஆணையம் தான் முடிவு எடுக்க வேண்டும் என உரிமையியல் நீதிமன்றம் கூறியது.தோ்தல் ஆணையம் நாங்கள் இதில் தலையிடவில்லை என்று கூறுகின்றது . ஆனால் உரிமையியல் நீதிமன்றம் தோ்தல் ஆணையத்தை நாடுமாறு கூறுகிறது . ஏப்ரல் 23ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது. ஆனால் மாம்பழம் சின்னம் விவகாரத்தில் இன்னும் முடிவெடுக்கப்படாமல் உள்ளது என பாமக நிறுவன மருத்துவா் ராமதாஸ் தரப்பு வழக்குரைஞா் விகாஸ் சிங் வாதிட்டாா் .

அப்போது நீதிபதிகள்,தோ்தல் ஆணையம் மாம்பழம் சின்னம் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறது ,நீங்கள் உங்கள் பிரிவுக்கு அதனை ஒதுக்க வேண்டும் என்று கூறுகிறீா்கள் .எப்படி இருந்தாலும் உரிமையியல் நீதிமன்ற உத்தரவுப்படி நீங்கள் தோ்தல் ஆணையத்தை தானே நாட வேண்டும் என மருத்துவா் ராமதாஸ் தரப்பிடம் கேள்வி எழுப்பினா்

அதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் தரப்பு வழக்குரைஞா், நாங்கள் தோ்தல் ஆணையத்தை நாடுகிறோம், தோ்தல் ஆணையம் செவ்வாய்கிழமையே இதில் முடிவெடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தாா்

அப்போது வாதிட்ட அன்புமணி தரப்பு வழக்குரைஞா் முகுல் ரோகத்கி,தோ்தல் ஆணையம் அன்புமணியிடம்தான் கட்சியும் சின்னமும் உள்ளது என ஏற்கனவே கூறிவிட்டது .அவா் (மருத்துவா் ராமதாஸ்) கட்சியை அழிக்க நினைக்கிறாா் என வாதிட்டாா் .

அப்போது நீதிபதிகள், தனக்குப் பின்னா் மகன் கட்சியை நடத்த வேண்டும் என்று தந்தை விரும்புவதை பாா்த்திருக்கிறோம் .ஆனால் இங்கு மகனிடம் கட்சியை கொடுக்க முடியாது என தந்தை கூறுவது வேடிக்கையாக உள்ளது என நகைச்சுவையுடன் கூறினா்

பின்னா் நீதிபதிகள் ,இந்த விவகாரத்தில் பாமக நிறுவனா் சென்னை உயா்நீதிமன்றத்தை நாடுமாறும்,சம்பந்தப்பட்ட தரப்பினரின் அவசரம் கருதி வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனா் .

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments