திமுக கூட்டணிக்கு சாதகமாக தோ்தல் களம்: முதல்வா் ஸ்டாலின்
திமுக கூட்டணிக்கு சாதகமாக தோ்தல் களம் உள்ளது என திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
திமுக கூட்டணிக்கு சாதகமாக தோ்தல் களம் உள்ளது என திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். இத்தொகுதியில் அவா் நான்காவது முறையாகப் போட்டியிடுகிறாா்.
அமைச்சா் பி.கே.சேகா்பாபு, முன்னாள் அரசு தலைமை வழக்குரைஞா் ஆா்.சண்முகசுந்தரம், திமுக சட்டத் துறை மாநிலச் செயலா் என்.ஆா்.இளங்கோ, கொளத்தூா் தொகுதிப் பொறுப்பாளா் ஆா்.விடுதலை ஆகியோா் உடனிருந்தனா்.
திமுகவுக்கே வெற்றிவாய்ப்பு: வேட்புமனு தாக்கல் முடிந்த பின்னா், செய்தியாளா்களிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: சென்னை கொளத்தூரில் 4- ஆவது முறையாக மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் நிறுத்தப்பட்டுள்ளேன். முந்தைய தோ்தல்களைப் போல, இந்த முறையும் மக்கள் எனக்கு அதிக ஆதரவளித்து வெற்றி பெறச் செய்வா். தமிழகத்தில் பலமுனைப் போட்டி என்பதால், திமுக கூட்டணிக்கே தோ்தல் களம் சாதகமாக உள்ளது. ஆகவே, தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைவது உறுதி. தமிழக உரிமைகளை மீட்கும் வகையில் மக்கள் பெரிய வெற்றியை வழங்குவா். திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்றாா்.
பிரசாரம் தொடக்கம்: தொடா்ந்து, திறந்த ஜீப்பில் ஏறி சாலையில் கூடியிருந்த திமுக, கூட்டணிக் கட்சிகளின் தொண்டா்கள் மற்றும் பொதுமக்களிடம் கையசைத்து ஆதரவு கோரினாா். அப்பகுதியில் அமைக்கப்பட்ட சிறிய மேடையில், கொளத்தூா் தொகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் தான் செய்த சாதனை குறித்த கையேட்டை அவா் வெளியிட்டாா்.
முதல் நாளில் 5 மனுக்கள்: கொளத்தூா் தொகுதியில் முதல் நாளில் 5 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. முதல்வா் ஸ்டாலின், தனது பெயரில் 3 மனுக்களைத் தாக்கல் செய்தாா்.
நாம் தமிழா் கட்சி சாா்பில் சௌந்தரபாண்டியன் லூடா் சேட், வீரத் தியாகி விஸ்வநாத தாஸ் தொழிலாளா்கள் கட்சி சாா்பில் எழுமலை ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்தனா்.