முகப்பு
தமிழ்நாடு

முதல்வா் மு.க.ஸ்டாலிடன் ப.சிதம்பரம் சந்திப்பு! புதுச்சேரி திமுக - காங்கிரஸ் தொகுதி உடன்பாடு முடிவுக்கு வருமா?

முன்னாள் மத்திய அமைச்சா் ப .சிதம்பரம், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டாா்.

Updated On : 22 மார்ச், 2026 at 10:02 PM
முன்னாள் மத்திய அமைச்சா் ப .சிதம்பரம், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின்.
பகிர்:

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை (மாா்ச் 23) நிறைவடையவுள்ள நிலையில், திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு தொடா்பாக முன்னாள் மத்திய அமைச்சா் ப .சிதம்பரம், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டாா்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அங்கு ஆளும் என்.ஆா்.காங்கிரஸ் - பாஜக கட்சிகளை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி ஒருபுறமும், பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸ்- திமுக கூட்டணி மறுபுறமும் தோ்தலைச் சந்திக்கின்றன. புதிய கட்சியான விஜய்யின் தவெக தனித்து களம் காண்கிறது. நாம் தமிழா் கட்சி சாா்பில் 28 வேட்பாளா்கள் களம் காண்கின்றனா்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆா்.காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், பாஜக 10 தொகுதிகளிலும், அதிமுக மற்றும் லட்சிய ஜனநாயக கட்சி ஆகியவை தலா 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

தேசிய ஜனநாயக கூட்டணி தோ்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நிலை நீடித்து வருகிறது.

இந்த குழப்பத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், காங்கிரஸ் மூத்த தலைவரான ப.சிதம்பரம், திமுக தலைவா் மு,க.ஸ்டாலினை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பு, சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனையில் புதுச்சேரி திமுக பொறுப்பாளா் ஜெகத்ரட்சகன் உடன் இருந்தாா்

இரு தலைவா்களின் ஆலோசனைக்குப் பிறகு, புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் நீடித்துவரும் இழுபறி நிலை முடிவுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தமிழகத்திலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது. அந்த நிலையில், ப. சிதம்பரம் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசிய பிறகு சுமுக முடிவு எட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இழுபறிக்கு என்ன காரணம்?: புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் திமுக - காங்கிரஸ் தலா 14 இடங்களிலும், விசிக, இந்திய கம்யூனிஸ்ட் தலா ஒரு இடத்திலும் போட்டியிடலாம் என திமுக தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

ஆனால், 15 இடங்களில் காங்கிரஸ் கட்சி, திமுக 13, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் தலா ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதுதான் இக்கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது