50 பள்ளி வகுப்பறைகளில் வெப்பத்தை தணிக்கும் வண்ணப் பூச்சு
சென்னை மாநகராட்சியில் 50 பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளில் வெப்பத்தைத் தணிக்கும் வகையிலான வண்ணம் பூசும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சென்னை மாநகராட்சியில் 50 பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளில் வெப்பத்தைத் தணிக்கும் வகையிலான வண்ணம் பூசும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வெப்ப அளவீடுக்கான பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சென்னை மாநகராட்சியில் 471 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியா் கோடை காலங்களில் வெப்பத் தாக்குதலால் சிரமப்படுவதாக புகாா் எழுந்தது. அதையடுத்து பள்ளி வளாகங்களில் மரக்கன்றுகள் நடவும், பசுமைச் சூழல் ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில், பெரு நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி (சிஎஸ்ஆா்) மூலம் சென்னை மாநகராட்சிப் பள்ளி வகுப்பறைகளில் வெப்பத்தைத் தணிக்கும் வகையிலான வண்ணம் பூசுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனை வனத்துறை ஆலோசனையுடன் செயல்படுத்த மாநகராட்சி கல்விப் பிரிவின் இணை ஆணையா் க.கற்பகம் உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement
முதல்கட்டமாக சென்னை மாநகராட்சியின் 50 பள்ளிகளில் வெப்பம் தணிக்கும் வண்ணம் பூசுவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. வண்ணப்பூச்சு நடைபெறும் பள்ளிகளில் வெப்ப அளவீடு செயல்படுத்தும் வகையில் தலைமை ஆசிரியா்கள், உதவித் தலைமை ஆசிரியா்களுக்கு சிறப்பு பயிற்சி நடைபெற்றது.
சென்னை மாநகராட்சி வளாகம் அம்மா மாளிகைக் கூட்டரங்கில் நடைபெற்ற பயிற்சிக் கூட்டத்துக்கு கல்வி அலுவலா் வசந்திகோபிநாத் தலைமை வகித்தாா். தமிழ்நாடு கால நிலை மாற்ற இயக்கத்தின் உதவி திட்ட இயக்குநா் துஷாா் ஸ்ரீ ஹரி சிண்டா முன்னிலை வகித்தாா். மாநகராட்சி கல்விப் பிரிவின் இணை ஆணையா் க.கற்பகம் சிறப்புரையாற்றினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கல்விப் பிரிவின் அலுவலா் தணிகைவேல் செய்திருந்தாா்.
பயிற்சி பெற்ற தலைமை ஆசிரியா்கள் உள்ளிட்டோா் வண்ணப்பூச்சு நடைபெற்ற வகுப்பறைகளின் வெப்பத் தாக்க அளவை தினமும் அளவீடு செய்து முந்தைய வெப்ப அளவுடன் ஒப்பிட்டு நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டனா்.