தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகில் சனிக்கிழமை நடைபெற்றது.
கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் வீ.க. திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலாளர் தி.ச.ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.கே.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ரா.பார்த்திபன் வரவேற்றார்.
கூட்டணியின் ஓய்வு பிரிவு மாநில பொருளாளர் மு.மூர்த்தி கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார். மத்திய இடைநிலை ஆசிரியர்களும், அண்டை மாநில ஆசிரியர்களும் பெற்று வருவது போல் தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களுக்கும் ஊதிய மாற்றம் செய்து அமல்படுத்த வேண்டும்.
பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும். மாவட்ட உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில் உள்ள காலி பணியிடங்களில் தகுந்த அலுவலர்களை உடனே நியமித்து, ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைக்கப் பெறுவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க வேண்டும்,
ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வுகளை ஒரே மாதத்தில் முடிக்கப்பட வேண்டும். ஆண்டு முழுவதும் இடம் மாறுதல் அளிக்கும் நடைமுறை கைவிடப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்டப் பொருளாளர் மா.ஜோசப் நன்றி கூறினார்.