முகப்பு
காஞ்சிபுரம்

உலக இளைஞர்கள் திறன் நாள் விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

உலக இளைஞர்கள் திறன் நாளையொட்டி காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை ஆட்சியர் பா.பொன்னையா தொடங்கி வைத்தார். 

Updated On : 10 ஜூலை, 2018 at 4:09 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:41 PM

உலக இளைஞர்கள் திறன் நாளையொட்டி காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை ஆட்சியர் பா.பொன்னையா தொடங்கி வைத்தார். 
அதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் பேசியது: 
உலக இளைஞர் திறன் நாள் ஆண்டுதோறும் ஜூலை 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை சார்பில் வளமான வாழ்க்கைக்கு ஏற்ற வாழ்க்கைத் தொழிலை தேர்ந்தெடுக்க வழிவகை செய்யப்படும். அதோடு, இளைஞர்கள் தங்களது திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பு பெறவும் ஜூலை 9 முதல் 13-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளில் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, வாழ்க்கை தொழில் வழிகாட்டி நிகழ்ச்சிகள், மகளிருக்கான சிறப்பு நிகழ்ச்சிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான திறன் பதிவு, தொழிற்பயிற்சி, பள்ளி மாணவர்களுக்கான திறன் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அடுத்தடுத்த நாள்களில் நடத்தப்படவுள்ளன என்றார் அவர்.
அவ்வகையில், பச்சையப்பன், ஆந்திரசன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் திறன் விழிப்புணர்வுப் பேரணியில் கலந்துகொண்டனர். இப்பேரணியில் கலந்துகொண்ட மாணவர்கள் திறன் பெறுவோம், வளம் பெறுவோம்' என்ற விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்தியபடி, முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து பச்சையப்பன் பள்ளி வளாகம் வரை ஊர்வலமாகச் சென்றனர். அப்போது, திறன் விழிப்புணர்வு, இலவச திறன் பயிற்சி குறித்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 
இதையடுத்து, பொதுமக்கள் குறைதீர் முகாம் கூட்டரங்கில் திறன் பயிற்சி பெறுவதற்கான பதிவு முகாம் நடைபெற்றது. இதனை, ஆட்சியர் பார்வையிட்டு, பதிவு செய்தவர்களுக்கு ஒப்புகைச் சான்றுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வேலைவாய்ப்புத் துறையின் துணை இயக்குநர் ஆர்.அருணகிரி, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஜீவா, ஆசிரியர்கள், திரளான மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.