வடமாநில இளைஞரைத் தாக்கி செல்லிடப்பேசி, பணம் பறித்த இருவர் கைது
சோமங்கலம் அருகே சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு தூங்கிக்கொண்டிருந்த வடமாநில லாரி ஓட்டுநரைத் தாக்கி செல்லிடப்பேசி மற்றும் பணம் பறித்த
சோமங்கலம் அருகே சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு தூங்கிக்கொண்டிருந்த வடமாநில லாரி ஓட்டுநரைத் தாக்கி செல்லிடப்பேசி மற்றும் பணம் பறித்த இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் தனஞ்சய்(25). இவர் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கொளத்தூர் பகுதியில் உள்ள வாகனங்களுக்கான டயர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு லாரி டயர்களை ஏற்றிச் செல்வதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்தார். லோடு ஏற்றுவதற்கு தாமதமாகும் என்று தொழிற்சாலை ஊழியர்கள் தெரிவித்ததால் தாம்பரம்-ஸ்ரீபெரும்புதூர் சாலையின் ஓரத்தில் தனது லாரியை நிறுத்திவிட்டு அதிலேயே படுத்துத் தூங்கினார்.
அப்போது அங்கு வந்த இரு மர்ம நபர்கள், மதுபாட்டிலை உடைத்து தனஞ்சய்யின் கழுத்தில் குத்தினர். அவர் நிலைகுலைந்து விழுந்தோபது, அவரிடம் இருந்த செல்லிடப்பேசி மற்றும் ரூ.500 ரொக்கம் ஆகியவற்றைப் பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து தனஞ்சய் சோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதன் அடிப்படையில், சோமங்கலம் பகுதியைச் சேர்ந்த தேவா(21), மேட்டூர் பகுதியைச் சேர்ந்த கோபி(18) ஆகிய இருவரே இந்தக் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ. 8 ஆயிரம் மதிப்புள்ள செல்லிடப்பேசி மற்றும் ரூ.500 ரொக்கத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். அந்த இருவரையும் சிறையில் அடைத்தனர்.