முகப்பு
காஞ்சிபுரம்

ஏரியில் கழிவுநீர் கலப்பு: அடுக்குமாடிக் குடியிருப்பை முற்றுகையிட்ட விவசாயிகள்

காரணித்தாங்கல் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அருகில் உள்ள செரப்பனஞ்சேரி பெரிய ஏரியில் கலந்து வருவதைக் கண்டித்து செரப்பனஞ்சேரி பகுதியைச் சேர்ந்த

Updated On : 4 செப்டம்பர், 2018 at 4:40 AM
பகிர்:


காரணித்தாங்கல் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அருகில் உள்ள செரப்பனஞ்சேரி பெரிய ஏரியில் கலந்து வருவதைக் கண்டித்து செரப்பனஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பொதுமக்கள் திங்கள்கிழமை தனியார் அடுக்குமாடி குடியிருப்பை முற்றைகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றயத்திற்குட்பட்ட செரப்பனஞ்சேரி பகுதியில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 100 ஏக்கர் பரப்பளவு உள்ள பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி நீர் செரப்பனஞ்சேரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. மேலும் இந்த ஏரி நீரைப் பயன்படுத்தி செரப்பனஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட நாவலூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், செரப்பனஞ்சேரி ஊராட்சிக்கு அருகில் உள்ள வைப்பூர் ஊராட்சிக்குட்பட்ட காரணித்தாங்கல் பகுதியில் தனியார் அடிக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பில் 120க்கும் மேற்பட்ட வீடுகளில் பலரும் வசித்து வருகின்றனர். இக்குடியிருப்பில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கடந்த சில மாதங்களாக பழுதடைந்துள்ளதாக தெரிகிறது. இதனால் குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகத்தினர் திறந்தவெளியில் விட்டுள்ளனர்.
இதனால் கழிவுநீர் வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் வழிந்தோடி சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால்வாய் மூலமாகச் சென்று அருகில் உள்ள செரப்பனஞ்சேரி பெரிய ஏரியில் கடந்த சில மாதங்களாக கலந்து வருகிறது. இதனால் ஏரி நீர் மாசடைந்து வருகிறது. ஏரியில் கழிவுநீர் கலப்பதற்கு இப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தபோதிலும் தொடர்ந்து ஏரியில் கழிவுநீர் கலந்து வருகிறது. 
இதைக் கண்டித்து, செரப்பனஞ்சேரி பகுதியைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகளும், பொதுமக்களும் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பை திங்கள்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலீஸார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.