போலி துப்பாக்கியைக் காட்டி ரூ.20 லட்சம் வழிப்பறி
பாலுசெட்டிசத்திரம் அருகே போலி துப்பாக்கியைக் காட்டி ரூ.20 லட்சத்தை வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
பாலுசெட்டிசத்திரம் அருகே போலி துப்பாக்கியைக் காட்டி ரூ.20 லட்சத்தை வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (35). இவர் அடகு நகைகளை வாங்கி விற்கும் முகவராக உள்ளார்.
இவரை சிலர் தொடர்புகொண்டு, அடகு வைத்து மீட்கப்பட்ட 2 கிலோ தங்க நகைகள் தங்களிடம் இருப்பதாகவும், ரூ.20 லட்சம் கொடுத்தால் 2 கிலோ நகைகளை தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பிய மணிகண்டன் ரூ.20 லட்சம் ரொக்கத்துடன், கிருஷ்ணகிரியில் இருந்து காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டிசத்திரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்துள்ளார். அங்கு, நகை இருப்பதாகக் கூறி மணிகண்டனை வரவழைத்த நபர்கள், அவரிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ரூ.20 லட்சத்தை வழிப்பறி செய்து தப்பியோடியுள்ளனர்.
இதுதொடர்பாக, பாலுசெட்டிசத்திரம் காவல்நிலையத்தில் மணிகண்டன் திங்கள்கிழமை புகார் அளித்தார். அதன்பேரில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி வழிப்பறியில் ஈடுபட்டவர்களை விரைந்து பிடிக்க தனிப்படை போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கு 406, 420, 417, 395,3 97 ஆகிய 5 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், வழிப்பறியில் 4 பேர் ஈடுபட்டுள்ளனர். அவர்களை அப்பகுதிமக்கள் சிலர் அடையாளம் காட்டியுள்ளனர். மேலும், வழிப்பறி கொள்ளையர்கள் ஆன்லைன் மூலம் ரூ.1,700-க்கு பொம்மை துப்பாக்கி வாங்கியதும், அதைக் காட்டி மிரட்டி மணிகண்டனிடம் பணம் பறித்துள்ளதும் தெரிவந்துள்ளது என போலீஸார் தெரிவித்துள்ளனர்.