காஞ்சிபுரம்

பிளாஸ்டிக் ஸ்டிராவுக்கு பதில் பப்பாளி இலைத்தண்டு!: இளநீர் வியாபாரியின் புதிய முயற்சி

DIN


பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கும் வகையில், பிளாஸ்டிக் ஸ்டிராவுக்கு (உறிஞ்சி) மாற்றாக பப்பாளி இலைத் தண்டை இளநீர் பருகுவோருக்கு தருகிறார் மாமல்லபுரத்தைச் சேர்ந்த இளநீர் வியாபாரி.
பிளாஸ்டிக் பயன்பாட்டை அறவே ஒழிக்க மாநில அரசு பல வழிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அரசு அதிகாரிகள் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுத்து பறிமுதல், அபராதம் என நடவடிக்கை மேற்கொண்டாலும் மக்கள் மத்தியில் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்க முடியாமல் உள்ளது. 
பிளாஸ்டிக் பொருள்களை மறைத்து வைத்து வியாபாரம் செய்பவர்களும் இருக்கிறார்கள். அனைவரின் மனதிலும் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணம் இருந்தால்தான் பிளாஸ்டிக்கை அறவே ஒழிக்க முடியும். ஒவ்வொரு வியாபாரியும் பிளாஸ்டிக்கை ஒழிக்க நாம் முதலில் மாற்று வழிக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் இருக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
சுற்றுலா நகரமாக விளங்கும் மாமல்லபுரத்தில் பேரூராட்சி, பள்ளிக் கல்வித்துறை, அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் என பல்வேறு அமைப்புகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தாலும், இன்னமும் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்கிறது. இந்நிலையில், இங்கு சாலமன் என்ற இளநீர் வியாபாரி மூன்றுசக்கர சைக்கிளில் வெள்ளிக்கிழமை இளநீரைக் கொண்டு வந்து வியாபாரம் செய்தார். அவர் வாடிக்கையாளர்கள் இளநீரை அருந்துவதற்கு பிளாஸ்டிக் ஸ்டிராவைத் தரவில்லை. மாறாக, பப்பாளி இலையின் தண்டை ஸ்டிரா போல் இளநீரில் வைத்துக் கொடுக்கிறார். அதை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வாங்கி அதன் மூலம் இளநீரைக் குடித்தனர். இது குறித்து சாலமன் கூறியது:
வட மாமல்லபுரம் பகுதியில் நான் வசித்து வருகிறேன். கடந்த ஆறு வருடங்களாக இளநீர் வியாபாரம் செய்கிறேன். பிளாஸ்டிக் ஸ்டிராதான் இளநீரை உறிஞ்சிக் குடிக்க வசதியாக இருக்கும். எனினும், பிளாஸ்டிக் பயன்பாடு  கூடாது என்று அரசு தடை விதித்துள்ளதால் நான் மாற்று வழியைத் தேடினேன்.  
இதனிடையே, நான் வீட்டில் இருக்கும்போது பப்பாளி இலைத் தண்டை ஒடித்துப் பார்த்தேன். அது ஸ்டிரா போலவே இருந்தது. முதல் நாளில், ஒரு பப்பாளி மரத்தின் இலைத் தண்டுகளை ஒடித்து, ஸ்டிரா அளவுக்கு துண்டாக்கி இளநீர் விற்பனைக்கு கொண்டு சென்றேன். 
சுற்றுலாப் பயணிகள் இளநீர் வாங்கி பப்பாளி ஸ்டிராவைக் கொண்டு ஆர்வத்துடன் குடித்தனர். 
அதையடுத்து, என் வீடு, பக்கத்து வீடு மற்றும் சாலைகளில் உள்ள பப்பாளி மரங்களின் இலைத் தண்டுகளை ஒடித்துவந்து துண்டு துண்டாக ஸ்டிரா போல் தயாரித்து, தண்ணீரில் கழுவி, இளநீருடன் எடுத்துச் செல்கிறேன். கடந்த ஒருவாரமாக பிளாஸ்டிக் ஸ்டிராவுக்கு பதிலாக பப்பாளி இலைத் தண்டை வைத்துதான் இளநீர் வியாபாரம் செய்கிறேன். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT