காஞ்சிபுரம்

கோயில் குளம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

DIN


சுங்குவார்சத்திரம் பிள்ளையார் கோயில் குளத்தின் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அளவீடு செய்யும் பணிகள் முடிவடைந்து 7 மாதங்கள் கடந்த நிலையில், விரைந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
சுங்குவார்சத்திரம் பேருந்து நிறுத்தத்தின் அருகே பழைமை வாய்ந்த பிள்ளையார் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குச் சொந்தமான குளம் சுமார் 3.5 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. 
இக்குளத்தை சுற்றிலும் உள்ள பகுதியை கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக  தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் மற்றும் வீடுகள் கட்டியுள்ளனர். 
இந்த கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் கலந்து வருவதாலும், குப்பை, கூளங்கள் கொட்டப்படுவதாலும் குளத்தின் நீர் முற்றிலும் மாசடைந்துள்ளது. 
குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், குளத்தைத் தூர்வாரி சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். 
இதைத் தொடர்ந்து குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்த வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் குளத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்யும் பணியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஈடுபட்டனர்.
அப்போது, குளத்தை  ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட 40-க்கும் மேற்பட்ட வீடுகள், 80-க்கும் மேற்பட்ட கடைகள் கணக்கெடுக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகத்துக்கும் அறிக்கை அனுப்பப்பட்டது. 
ஆனால், இதுவரையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது: 
குளத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்யும் பணி முடிவடைந்தது 7 மாதங்கள் ஆகியும் அதிகாரிகளின் அலட்சியத்தால் குளத்தின் ஆக்கிரமிப்புகள் இதுவரை அகற்றப்படாமல் உள்ளது. 
இதுகுறித்து பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகப்பா அரசு கலைக்கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

உளுந்து, எள், கடலை பயிா்களை சாகுபடி செய்ய அறிவுறுத்தல்

கட்டுகுடிப்பட்டியில் மஞ்சுவிரட்டு

செட்டிநாடு உணவுப் பொருள்கள் விற்பனைத் திருவிழா

கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவப் பயிற்சி

SCROLL FOR NEXT