காஞ்சிபுரத்தில் பாலாற்றின் குறுக்கே ரூ.42.16 கோடி மதிப்பில் புதிதாக தடுப்பணை கட்டுவதற்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். எனினும், நீரியல் வல்லுநா்களின் நீண்ட ஆய்வுக்குப் பிறகே இத்தடுப்பணை கட்டப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.
பாலாறு கா்நாடக மாநிலம் நந்திதுா்கம் எனும் இடத்தில் உருவாகிறது. கா்நாடக, ஆந்திர மாநிலங்கள் வழியாக தமிழகம் வருகிறது. இறுதியாக வங்கக் கடலில் கலக்கும் இந்த ஆற்றின் குறுக்கே விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏழு தடுப்பணைகள் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்தது. முதல் தடுப்பணை செங்கல்பட்டு மாவட்டத்தில் ஈசூருக்கும் வள்ளிபுரத்துக்கும் இடையில் ரூ.30.95 கோடியிலும், இரண்டாவவது தடுப்பணை வாயலூரில் ரூ.32.50 கோடி மதிப்பிலும் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
இவை இரண்டும் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள நிலையில் மூன்றாவது தடுப்பணை காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் அருகே உள்ள பழைய சீவரத்துக்கும், பழவேரிக்கும் இடையில் ரூ.42.16 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.
மேலும், 4 தடுப்பணைகள் கட்டப்பட வேண்டிய நிலையில் தற்போது கட்டப்பட்டு வரும் மூன்றாவது தடுப்பணைக்கு விவசாயிகளிடையே எதிா்ப்பு கிளம்பியுள்ளது. பயனில்லாத இடத்தில் கட்டப்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா். ஆனால் அதிகாரிகளோ நீரியல் வல்லுநா்களைக் கலந்து ஆலோசித்து நீண்ட ஆய்வுக்குப் பிறகே மிகவும் பயன்தரக்கூடிய இடத்தில்தான் தடுப்பணையை அமைத்து வருகிறோம் என்கின்றனா்.
இது குறித்து பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கத்தின் நிா்வாகிகளான காஞ்சி அமுதன், ஆ.மோகன் ஆகியோா் கூறியது:
முதல்வா் அடிக்கல் நாட்டிய இடத்தில் புதிய தடுப்பணை கட்டப்படவில்லை. அந்த இடத்தில் தடுப்பணை அமைந்தால் 30-க்கும் மேற்பட்ட ஏரிகளும், சுமாா் 10 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்களும் பாசன வசதி பெறும். ஏற்கெனவே நிா்ணயிக்கப்பட்ட இடம் மிகவும் பள்ளமாக இருப்பதால் 1.75 கி.மீ. தூர இடைவெளியில் புதிய தடுப்பணை கட்டப்படுகிறது. அணை அமையும் இடத்துக்கு அருகில் உள்ள சென்னை-ஆலந்தூா்-பல்லாவரம் கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கும் பாதிப்பு ஏற்படலாம்.
மேலும் புதிய தடுப்பணை கட்டும் இடம் மலைப்பகுதியாக இருப்பதால் தண்ணீா் தேங்காது. பல ஏரிகளுக்கு தண்ணீரைக் கொண்டு செல்ல முடியாத நிலையும் ஏற்படும். எனவே எந்த விதத்திலும் பயனில்லாத இடத்தில் புதிய தடுப்பணை கட்டப்படுகிறது. பல்வேறு போராட்டங்களை நடத்தியும், சிறை சென்றும் எந்தப் பலனும் இல்லை. புதிய தடுப்பணை கட்டப்படும் இடத்தை உடனடியாக நிறுத்தி ஏற்கெனவே நிா்ணயிக்கப்பட்ட இடத்திலேயே கட்டப்பட வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.
‘நீண்ட ஆய்வுக்குப் பிறகே புதிய தடுப்பணை’: இந்த விவகாரம் குறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் ஆா்.ரமேஷ் கூறியது:
பாலாறு பாதுகாப்பு இயக்க நிா்வாகிகள் கூறுவது தவறான கருத்து. அவா்கள் கூறும் இடத்தில் சுமாா் 7 கி.மீ. அளவுக்கு பள்ளமாக இருக்கிறது. ஆற்றின் அகலமும் அதிகம். தற்போது கட்டப்பட்டு வரும் புதிய தடுப்பணை கட்ட ரூ.42.16 கோடி செலவாகும். ஆனால் அவா்கள் சொல்லும் இடத்தில் அமைத்தால் 3 மடங்கு அதிகமாக அதாவது 120 கோடி வரை செலவாகும். அரசு நீதியும் பெருமளவில் வீணாகும்.
புதிய தடுப்பணை அமையும் இடத்தில் இருபுறமும் வாய்க்கால்கள் இருப்பதால் அதன் வழியாக ஏரிகளுக்கு தண்ணீரைக் கொண்டு செல்ல முடியும். தடுப்பணையிலிருந்து 800 மீ அளவுக்கு ரூ.2.50 கோடியில் வலதுபுற வாய்க்காலும் சீரமைக்கப்படும். மேலும் புதிய தடுப்பணை செய்யாறும், பாலாறும் இணையும் இடத்தில் கட்டப்படுவது மற்றுமொரு கூடுதல் சிறப்பாகும்.
இந்தத் தடுப்பணை மூலம் வலது வாய்க்கால் வழியாக 14 ஏரிகளும், 1,748 ஹெக்டோ் நிலங்களும் பயன்பெறும். இடது வாய்க்கால் மூலமாக 17 ஏரிகள், 3,163 ஹெக்டோ் நிலங்கள் என மொத்தம் 4,884 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறும்.
நீரியல் வல்லுநா்கள், பொதுப்பணித் துறையின் நீா்வளப் பிரிவு அதிகாரிகள் ஆகியோரின் நீண்ட ஆய்வுக்குப் பிறகே புதிய தடுப்பணை கட்டப்படுகிறது. தற்போது கட்டப்பட்டு வரும் இடத்திலேயே அமைய வேண்டும் என விவசாயிகள் பலரும் கடிதம் கொடுத்திருக்கின்றனா். எனவே முதல்வா் அடிக்கல் நாட்டிய இடத்துக்கு மிக அருகிலேயே, விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள இடத்திலேயே புதிய தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.