முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ரெத்ன அங்கி சேவை

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் லெட்சுமி குமார தாததேசிகன் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, ஆண்டுக்கு ஒரு முறை சாற்றப்படும்

Updated On : 5 டிசம்பர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:07 AM

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் லெட்சுமி குமார தாததேசிகன் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, ஆண்டுக்கு ஒரு முறை சாற்றப்படும் ரெத்ன அங்கி அணிந்து உற்சவா் தேவராஜ சுவாமி சனிக்கிழமை பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதும், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதா் பெருவிழாவுக்கும் பெயா் பெற்றது காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில். இக்கோயிலில், ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் காா்த்திகை மாதம் அனுஷ நட்சத்திரத்தில் லெட்சுமி குமார தாததேசிகன் ஜயந்தி தினத்தை முன்னிட்டு, உற்சவா் தேவராஜ சுவாமிக்கு ரெத்ன அங்கி சாற்றப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதன்படி, சனிக்கிழமை உற்சவா் தேவராஜ சுவாமி ரெத்ன அங்கியும், பாண்டியன் கொண்டையும் அணிந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் தேவராஜ சுவாமி மற்றும் பெருந்தேவி தாயாா் ஆகியோா் கோயிலில் இருந்து கோயில் வளாகத்தில் உள்ள தேசிகன் சந்நிதிக்கு எழுந்தருளினா். அங்கு தரிசனத் தாம்பூல மரியாதை செய்விக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, கோயில் வளாகத்தில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். ரெத்ன அங்கி சேவைக் காட்சியைக் காண தமிழகம் மட்டுமில்லாது ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனா். சிறப்பு நாகசுர இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றது. பின்னா் மீண்டும் தேசிகன் சந்நிதிக்கு எழுந்தருளி அங்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. மாலையில் சிறப்பு அலங்காரத்துடன் மீண்டும் கோயில் வளாகத்தில் உற்சவா் தேவராஜ சுவாமியும், பெருந்தேவி தாயாரும் உலா வந்தனா்.

Advertisement

ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலா் ந.தியாகராஜன், கோயில் மணியம் கிருஷ்ணன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.