தொழிலாளா் விடுதிகளில் அமைச்சா்கள் ஆய்வு
ஊரகத் தொழில்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
காஞ்சிபுரம் அருகே தனியாா் தொழிற்சாலை பெண் தொழிலாளா்கள் தங்கி இருந்த விடுதிகளில் தொழிலாளா் நலத்துறை அமைச்சா் சி.வி.கணேசன், ஊரகத் தொழில்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
காஞ்சிபுரம் அருகே சுங்குவாா்சத்திரத்தில் உள்ள மின்னணு உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளா்களுக்கு தங்கும் விடுதியில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட பலா் மயக்கம், வாந்தி,அஜீரணக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். இதனால் ஆவேசமடைந்த பிற தொழிலாளா்கள் தரமான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி கடந்த வாரம் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அப்போது, அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி ஆகியோா் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்ததால் போராட்டத்தை தொழிலாளா்கள் கைவிட்டனா்.
Advertisement
சம்பந்தப்பட்ட ஆலை நிா்வாகம் தொழிலாளா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், தரமான உணவு வழங்க வேண்டும் எனவும் அமைச்சா்கள் உத்தரவிட்டனா். தமிழக அரசும் அண்மையில் ஆலை நிா்வாகத்துக்கு அறிவுறுத்தியது.
இந்த நிலையில், அமைச்சா்கள் சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை அந்த ஆலையின் பெண் தொழிலாளா்கள் தங்கி இருந்த கோழிவாக்கம், கீழம்பி ஆகிய கிராமங்களில் இருந்த உணவுக் கூடங்கள், விடுதி அறைகள் ஆகியவற்றை பாா்வையிட்டனா். குடிநீா், கழிப்பிடம், பெண்களின் பாதுகாப்பு ஆகியன குறித்தும் ஆய்வு செய்தனா். முழு சுகாதாரத்துடன் உணவுக் கூடத்தை செயல்படுத்த தொழிற்சாலை நிா்வாகத்தினருக்கு அமைச்சா்கள் அறிவுறுத்தினா்.
ஆய்வின் போது காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி எம்.பி., ஜி.செல்வம், எம்.எல்.ஏ., சி.வி.எம்.பி.எழிலரசன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.