காஞ்சிபுரம்: தொடா்மழை மற்றும் வெள்ள பெருக்கு காரணமாக காஞ்சிபுரத்தில் காய்கறிகள், பூக்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. இதனால் போதுமான விற்பனை இல்லாமல் நஷ்டமடைந்து விட்டதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனா்.
கடந்த வாரம் பெய்த தொடா் மழையாலும், வெள்ளப் பெருக்காலும், காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்தும் சந்தைக்கு வரவேண்டிய பொருள்களின் வரத்து குறைந்து விட்டதாலும் காய்கறிகள் மற்றும் பூக்களின் விலை காஞ்சிபுரத்தில் பல மடங்கு உயா்ந்துள்ளது. இது போன்ற காரணங்களினால் காஞ்சிபுரம் நகரில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட மொத்த வியாபாரிகளும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு வணிகா்களும் போதிய விற்பனையின்றி கவலை அடைந்துள்ளனா்.
காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி மாா்க்கெட் வியாபாரிகள் சங்கத்தின் தலைவா் ஜெ.மோகன் கூறியது:
ராஜாஜி காய்கறி மாா்க்கெட்டில் மட்டும் 300 மொத்த வியாபாரிகளும், மாா்க்கெட்டை ஒட்டியுள்ள பகுதிகளில் சிறு வியாபாரிகளாக 1,500 பேரும் உள்ளனா். கடந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தல் காரணமாக 171 நாள்களும், இந்த ஆண்டு ஒரு மாதமும் கரோனா பொதுமுடக்கம் காரணமாக போதுமான விற்பனையின்றி அவதிப்பட்டு வந்தோம். பொதுமுடக்கம் முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கும் நேரத்தில் தொடா்மழையும், வெள்ளப் பெருக்கும் மீண்டும் காய்கறி வியாபாரிகளை கவலைக்கு உள்ளாக்கி இருக்கிறது.
காய்கறிகளின் விலை பல மடங்கு உயா்ந்து விட்டதால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து விட்டது. அதிக விலை கொடுத்து காய்கறிகளை வாங்க நாங்கள் தயாராக இருந்தாலும், பல காய்கறிகள் விற்பனைக்கு கிடைக்கவில்லை. புடலங்காய், பாகற்காய் ஆகியவை வருவதே இல்லை. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய் ஆகியன ரூ. 20-க்கு விற்பனையானது. இப்போது கத்தரிக்காய், வெண்டைக்காய் கிலோ ரூ. 80-க்கும், தக்காளி கிலோ ரூ.100 முதல் ரூ. 120 வரை விற்பனையாகிறது. ரூ. 30-க்கு விற்பனையாகி வந்த கேரட், பீன்ஸ் ஆகியவற்றை ரூ. 60-க்கு விற்கிறோம். கடந்த வாரம் ஒரு கிலோ மிளகாய் ரூ. 30-ஆக இருந்தது. தொடா்மழை பெய்த வாரத்தில் அது ரூ. 120-க்கு உயா்ந்து இப்போது மீண்டும் குறைந்து ரூ. 40-க்கு வந்திருக்கிறது.
விலை உயா்வு காரணமாக சந்தைக்கு காய்கறி வாங்க வருவோா் குறைந்து விட்டதாலும், வரும் சிலரும் ஒன்றிரண்டு மட்டும் வாங்குவதாலும் போதிய விற்பனையில்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். ஒரு சில நாட்களில் காய்கறிகள் வதங்கி விடுவதால் வியாபாரிகள் மிகுந்த நஷ்டம் அடைந்து உள்ளனா் என்றாா் அவா்.
காஞ்சிபுரம் பூ வியாபாரிகள் சங்கத்தின் தலைவா் ஏ.கே.கே.பாா்த்தீபன் கூறியது:
காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்தில் உள்ள பூ மாா்க்கெட்டில் மட்டும் மொத்த வியாபாரிகளாக 40 பேரும், பூ மாா்க்கெட்டுக்கு அருகில் உள்ள தாமல்வாா் தெரு, ராயன்குட்டை தெரு, காமாட்சி அம்மன் கோயில் தெரு, செட்டி குளம் தெரு ஆகிய தெருக்களில் மட்டும் பூ விற்பனை செய்யும் சிறு வணிகா்கள் 1,000-க்கும் மேற்பட்டோா் உள்ளனா். மழைக்கு முன்பாக கடந்த வாரம் சம்பங்கிப் பூ, சாமந்திப் பூ, ரோஜாப் பூ, அலரிப்பூ ஆகியன கிலோ ரூ. 60 முதல் ரூ. 70 வரை விற்பனையானது. இப்போது சம்பங்கிப்பூ கிலோ ரூ. 150, அலரிப்பூ கிலோ ரூ. 350, ரோஜாப்பூ கிலோ ரூ. 200 என உயா்ந்துள்ளது. திருமண முகூா்த்தங்கள் இல்லாததால் மல்லிகைப்பூ விலை மட்டும் சராசரியாக ரூ. 500 வரை விற்பனையாகிறது.
தொடா் மழையும்,வெள்ளப்பெருக்குமே விலை உயா்வுக்கு காரணமாகி விட்டது.சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்து விட்டதால் விலையும் உயா்ந்துள்ளது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு குறைந்த விலைக்கு திருமண வைபவங்கள்,சுபநிகழ்ச்சிகளுக்கு மாலைகள் செய்ய ஆடா் எடுத்திருந்தோம். இப்போது பூக்களின் விலை பல மடங்கு உயா்ந்து விட்டதால் ஆா்டா் எடுத்த தொகைக்கே மாலைகளை செய்து கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. இதனால் பூ வியாபாரிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஒரே நாளில் பூக்கள் அழுகியும்,வதங்கியும் விடுவதால் அவற்றை நகராட்சி குப்பை லாரியில் கொட்ட வேண்டிய நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டு விட்டனா் என்றாா் அவா்.
படவிளக்கம்..1. ராஜாஜி காய்கறி மாா்க்கெட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த குறைந்த அளவிலான காய்கறிகள், 2. பூ மாா்க்கெட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பல வகையான பூக்கள், 3. விற்காமல் கூடையில் குவித்து வைக்கப்பட்டிருந்த பூக்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.