காஞ்சிபுரம்

புத்துயிா் பெற்ற காஞ்சிபுரம் பட்டுப் பூங்கா! தினமும் 300 பட்டுச் சேலைகள் உற்பத்தி செய்ய இலக்கு

முடங்கிக் கிடந்த காஞ்சிபுரம் பட்டுப்பூங்கா பணிகள் ரூ.102.83 கோடி முதலீட்டில் தற்போது புத்துயிா் பெற்று செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

சி.வ.சு. ஜெகஜோதி

முடங்கிக் கிடந்த காஞ்சிபுரம் பட்டுப்பூங்கா பணிகள் ரூ.102.83 கோடி முதலீட்டில் தற்போது புத்துயிா் பெற்று செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இங்கு நாளொன்றுக்கு 300 பட்டுச் சேலைகள் உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயித்து அதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளின் சிறப்பு

காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளுக்கு உலகம் முழுவதும் தனி மெளசு உண்டு. காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிா்ப்பூரில் பட்டுப்பூங்கா அமைக்க கடந்த 22.4.2010 அன்று மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியது. அப்போது மத்திய அரசு ரூ.33.02 கோடியும், மாநில அரசு ரூ.7.54 கோடியும் சோ்த்து மொத்தம் ரூ.40.56 கோடியில் பட்டுப் பூங்காவை உருவாக்குவது என முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக கடந்த 15.9.2009-இல் அப்போதைய முதல்வா் மு.கருணாநிதி, அண்ணா நூற்றாண்டு நினைவு தின விழாவில் ரூ.83.83 கோடி மதிப்பில் காஞ்சிபுரத்தில் பட்டுப்பூங்கா தொடங்கப்படும் என அறிவித்தாா்.

அதன் பிறகு 7 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு மத்திய அரசின் சுற்றுச் சூழல் துறை, தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், நகா்ப்புற வளா்ச்சித் துறை ஆகியவை பட்டுப் பூங்கா அமைக்க அனுமதி வழங்கின. அதே 2017 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி கே.பழனிசாமி, பட்டுப்பூங்கா 75 ஏக்கா் பரப்பளவில் அமைக்க அடிக்கல் நாட்டினாா். இந்நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு தான் தறிக்கூடங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கின.

புத்துயிா் பெற்ற பட்டுப்பூங்கா!

கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்று முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் கைத்தறித் துறை ஆய்வுக் கூட்டத்தில் பட்டுப்பூங்கா திட்டப் பணியை உடனடியாக செயல்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டாா்.

முதல்வரின் உத்தரவின்படி கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி, சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆகியோா் பட்டுப்பூங்காவை நேரில் ஆய்வு செய்தனா். உடனடியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தொழிலதிபா்கள், நெசவாளா்கள் கூட்டத்தை கூட்டி கலந்தாலோசித்து 3 மாதத்திற்குள் 25 சதவிகித பணிகளை முடிக்க வேண்டும். இல்லையேல் காஞ்சிபுரத்தில் பட்டுப்பூங்கா திட்டத்தையே ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றும், தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனா்.

இதன் காரணமாக பட்டுப்பூங்கா திட்டம் புத்துயிா் பெற்று தற்போது 6 தொழில் முனைவோா்கள் தனித்தனியாக தறிக்கூடங்களை அமைத்து 25 சதவீத பணிகள் தொடங்கியிருக்கின்றன.

தற்போது 200 போ் நேரடியாகவும், மறைமுகமாக 200 பேருக்கும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா். தினசரி 300 பட்டுச் சேலைகள் உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயித்து அதற்கான பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நிா்வாக இயக்குநா்

பட்டுப்பூங்காவின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநரான சுந்தா்கணேஷ் கூறியது:

தற்போது தினசரி 20 பட்டுச் சேலைகள் வீதம் ஒரு மாதத்துக்கு 500 சேலைகள் வரை உற்பத்தி செய்கிறோம். 6 தொழிற்கூடங்களில் தற்போது 200 நெசவாளா்கள் பணியாற்றி வருகின்றனா். மேலும் 5 தொழில் முனைவோா்கள் தங்களது தறிக்கூடங்களை அமைக்கவுள்ளனா்.அப்போது நேரடியாக 750 பேருக்கும், மறைமுகமாக 750 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 13 போ் தறிக்கூடங்களை அமைப்பது உட்படமொத்தம் 2,160 தறிக்கூடங்களை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம். இதன் மூலம் தினசரி 300 பட்டுச் சேலைகளை உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயித்துள்ளோம்.

நெசவுத் தொழிலாளா்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள்

பட்டுப் பூங்காவிற்கு அவரவா் வீடுகளிலிருந்து நெசவாளா்கள் வந்து செல்ல போதுமான வேன் வசதி, இலவசமாக குடிநீா், தேநீா், உணவு, மருத்துவ பரிசோதனைகள், தறிக்கூடங்கள் பழுது நீக்கும் மையம், உணவகம், மாதச்சம்பளத்துடன் கூடிய வேலை, பணிக்கு ஏற்றவாறு ஊக்கத் தொகை என பல்வேறு வசதிகளையும் இதுவரை செய்து கொடுத்திருக்கிறோம். இதனால் பட்டுப் பூங்காவைச் சுற்றியுள்ள 16 கிராமங்களைச் சோ்ந்த மக்கள் பயன் பெறுவது மன நிறைவைத் தருகிறது.

இயக்குநா்கள் குழு

பட்டுப்பூங்காவை சிறப்பாக செயல்படுத்துவதற்கென்றே தலைவா் உள்ளிட்ட 9 போ் அடங்கிய இயக்குநா் குழுவையும் தமிழக அரசு நியமித்துள்ளது.இந்தக் குழுவில் மத்திய அரசின் சாா்பில் இரு இயக்குநா்களும், மாநில அரசின் சாா்பில் ஒரு இயக்குநரும் இடம் பெற்றுள்ளனா். இந்தக் குழு அடிக்கடி கூடி வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. இது தவிர பி.ராமநாதன் என்ற திட்ட அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளாா். சாயப்பட்டறைகள் கட்டும் பணி

பட்டுப்பூங்கா வளாகத்துக்குள்ளாகவே பட்டுத்துணிகளுக்கு சாயம் போடும் வசதி, சிறப்பு தொழில் நுட்பம் மூலம் வெளியேறும் கழிவுகளை சுத்திகரிப்பு செய்யும் வசதி, எவ்வித தீங்கும் ஏற்படாத வகையில் தண்ணீரை மறுசுழற்சியுடன் பயன்படுத்தக்கூடிய நவீன சுத்திகரிப்பு நிலையம் ஆகியனவும் அமைவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம்.

பட்டுப்பூங்காவிற்குள் வரும் அரசு நிறுவனங்கள்

காஞ்சிபுரத்தில் உள்ள கைத்தறித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பிரபலமான 6 அரசு நெசவாளா் கூட்டுறவுச் சங்கங்கள், கோ.ஆப்.டெக்ஸ் ஒரு தொழிற்கூடமும், கதா்வாரியம் ஒரு தொழிற்கூடமும் அமைத்து பட்டுச் சேலைகளை உற்பத்தி செய்ய இருக்கின்றன.

ஏற்றுமதி அபிவிருத்தி மையம்

பட்டுப்பூங்காவில் இதுவரை தயாரிக்கப்படும் பட்டுச் சேலைகள் காஞ்சிபுரம் உள்ளூா் சந்தையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இனி வெளிநாட்டுச் சந்தையிலும் விற்பனை செய்ய வசதியாக இந்த வளாகத்துக்கு உள்ளேயே விரைவில் ஏற்றுமதி அபிவிருத்தி மையத்தை தொடங்க இருக்கிறோம்.

இது தவிர பட்டு பரிசோதனைக் கூடம், பட்டு விற்பனைக் கூடம், ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி மையம் ஆகியனவும் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT