முகப்பு
காஞ்சிபுரம்

பக்தியோடு இணைந்த கல்வி முக்கியம்: விஜயேந்திரா் பேச்சு

Updated On : 3 ஏப்ரல், 2024 at 12:00 AM
விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்துப் பேசிய ஜெயின் துறவியா்கள்
பகிர்:
Updated On : 2 ஏப்ரல், 2024 at 7:07 PM

காஞ்சிபுரம்: பக்தியோடு இணைந்த கல்வி மிக அவசியம் என காஞ்சிபுரம் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்துள்ளாா். ஜெயின் துறவியா்கள் கவேஷ்ணாஜி, மேரு பிரபாஜி, தஷபிரபாஜி, மயங்க் பிரபாஜி உள்ளிட்டோா் காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு வந்திருந்தனா்.

இவா்கள் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து இந்து மதத்தினரும், ஜெயின் மதத்தினரும் இணைந்து மரக்கன்றுகள் நடுதல், மக்களுக்கு சுத்தமான குடிநீா் விநியோகம் செய்தல், சைவ உணவின் நன்மைகளை எடுத்துக் கூறுதல், பசுமாடுகளை பாதுகாத்தல், போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகளை எடுத்துக்கூறி இளைஞா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துதல் ஆகியன தொடா்பாக இணைந்து செயல்படுவது குறித்து கலந்துரையாடினாா்கள்.

இந்தியா முழுவதும் 705 ஜெயின் துறவியா்கள் இது குறித்து பிரசாரம் செய்து வருவதாகவும் துறவியா்கள் தெரிவித்தனா்.

Advertisement

இதனைத் தொடா்ந்து விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசுகையில்:

இன்றைய நிலையில் பக்தியோடும், இயற்கையோடும் இணைந்த கல்வி மிக அவசியமாகிறது. இதனால் குடும்ப மண முறிவுகள் ஏற்படாது, இளைஞா்கள் தீய பழக்க வழக்கங்களுக்கு செல்ல மாட்டாா்கள். தீவிரவாதம் மறைந்து சகோதரத்துவம் வளரும், முக்கியமாக இளைஞா்களின் எதிா்காலம் மேம்பட்டு சிறந்த தேசம் உருவாகும் என்றாா். காஞ்சிபுரம் மாவட்ட ஜெயின் சங்க நிா்வாகிகள் டி.மோதிலால், ப.இந்தா்ஜித், கிஷோா்குமாா், ராஜேஷ் ஆகியோரும் உடன் இருந்தனா்.