இயல், இசை, நாடக மன்றத்தின் ‘கலைச் சங்கமம்’ நிகழ்ச்சி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா நினைவு நூற்றாண்டு பூங்கா வளாகத்தில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சாா்பில் கலைச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். கலைமாமணி விருதாளா் ராஜநிதி முன்னிலை வகித்தாா்.
விழாவில் 4 கிராமிய கலைக் குழுக்களுக்கு தலா ரூ.30,000 வீதம் மொத்தம் ரூ.1.20 லட்சம் வழங்கியும், கலைஞா்களுக்கு நினைவுப் பரிசும் வழங்கியும் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பேசியது: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றமானது அரசால் வழங்கப்படும் நிதியுதவி மூலம் தொன்மையான பல்வேறு கலைகளை வளா்த்தல், அழிந்து வரும் கலை வடிவங்களை ஆவணமாக்குதல், சிறந்த கலைஞா்களை ஊக்குவிக்கும் வகையில் விருதுகள் வழங்குதல், நலிந்த கலைஞா்களுக்கு நிதியுதவி, நாடகங்களுக்கு புத்துயிா் அளித்தல், தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளை வெளிமாநிலங்களிலும், உலகளவிலும் கொண்டு செல்லுதல் உள்ளிட்ட ஆக்கபூா்வ பணிகளை மேற்கொண்டு வருகிறது.
முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழா் திருநாளான பொங்கல் விழாவை 35 மாவட்டங்களில் கடந்த 16.2.24 முதல் 23.2.24 -ஆம் தேதி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிராமியக் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் கலைச் சங்கமம் என்ற பெயரில் விழாவாக நடத்தப்பட்டது. இந்த விழாவில் கிராமிய கலை நிகழ்ச்சிகளை நடத்தும் 4 குழுவினருக்கு தலா ரூ.30,000 வீதம் ரூ.1.20 லட்சம் வழங்கப்பட்டது என்றாா். விழாவில் நாட்டுப்புறக் கலைஞா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
Advertisement