முகப்பு
தினமணி கதிர்

இசையில் புதுமை...

உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தையொட்டி, சென்னை மயிலாப்பூரில் ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான குழந்தைகளின் இசை நிகழ்ச்சி, சேவையாளர்களுக்கு விருது என்று முழு நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார் மருத்துவர் பிரபா குருமூர்த்தி.

Updated On : 12 ஏப்ரல், 2026 at 4:03 AM
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2026 at 7:30 PM

உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தையொட்டி, சென்னை மயிலாப்பூரில் ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான குழந்தைகளின் இசை நிகழ்ச்சி, சேவையாளர்களுக்கு விருது என்று முழு நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார் மருத்துவர் பிரபா குருமூர்த்தி. பழம்பெரும் இசைக் கலைஞரும் நடிகருமான டி.ஆர். மகாலிங்கத்தின் மகள் வழி பேத்தியான இவர், முறைப்படி இசை பயின்றவர். பின்னணிக் குரல் கலைஞராக இவர், பல ஆவணப் படங்களுக்குக் குரல் கொடுத்திருக்கிறார்.

ஆட்டிசம் பாதித்தோருக்கு இசைப் பயிற்சியை அளித்து, அவர்களது திறமையை வெளிப்படுத்தும் வகையில் இசை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வரும் பிரபா குருமூர்த்தியிடம் பேசியபோது:

'ஆட்டிசம் என்ற மன இறுக்கத்தால் இந்தியாவில் மட்டும் சுமார் பத்து லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளே ஆட்டிசத்தால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். பெற்றோர்களின் சரியான கவனிப்பின் மூலமாக ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான குழந்தைகளை திறமைசாலிகளாக மாற்ற முடியும்.

Advertisement

இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் ஏப்ரல் 2 -ஆம் தேதி உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

நான் கரோனா காலத்துக்கு முன்பாகவே இணைய வழியில் பக்தி இசை, பஜனைகளைச் சொல்லிக் கொடுத்துவருகிறேன். அவர்களில் சிலர் ஆட்டிசம் பாதிப்புக்குள்ளானவர்கள். தெளிவாகப் பேச முடியாத சூழ்நிலையிலும்கூட அவர்கள் இசையில் காட்டிய ஆர்வமும், பாடல்களைப் பாடிய விதமும் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அப்போதுதான் ஆட்டிசம் குழந்தைகளுக்கென்றே தனியே இசைப் பள்ளியைத் தொடங்கினேன்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 150-க்கும் அதிகமான ஆட்டிசம் குழந்தைகளுக்கு இசையைப் பயிற்றுவித்துள்ளேன். எங்கள் சூர்யா இசைப் பள்ளியின் மாணவர்கள் இப்போது சென்னையில் மட்டுமன்றி, மதுரை உள்ளிட்ட பிற ஊர்களிலும் இருக்கின்றனர்.

அந்தக் குழந்தைகளுக்கு பாடுவதற்குச் சொல்லிக் கொடுத்ததோடு, அவர்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என நினைத்தேன். இதற்காக அவர்களைக் கொண்டு, வார இறுதி நாள்களில் சிறிய அளவில் இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்து வருகிறேன்.

இசைப் பள்ளியின் ஆண்டு விழா, உலக மாற்றுத் திறனாளிகள் தினம், ஏப்ரல் 2-இல் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் ஆகிய மூன்று தினங்களிலும் எங்கள் மாணவர்கள் பங்கேற்க, பெரிய அளவிலான நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். இந்த நாள்களில் பல்வேறு மேடை இசைக் கலைஞர்களோடு அவர்கள் இணைந்து பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சிகளை வடிவமைக்கிறோம்.

தொடர்ந்து 48 மணி நேரத்துக்கு ஆட்டிசம் குழந்தைகள் தொகுத்து வழங்கிய தொடர் இசை நிகழ்ச்சி, ஆட்டிசம் பாதித்தவர்களோடு மாற்றுத் திறனாளிக் குழந்தைகளும் பங்கேற்க பல்வகைத் திறமைகளையும் வெளிப்படுத்தும்படியான நிகழ்ச்சி என இரு சாதனை நிகழ்ச்சிகளை நடத்தினோம். வரும் டிசம்பரில் எங்களது அடுத்த சாதனைக்குத் திட்டமிட்டிருக்கிறோம்' என்கிறார் பிரபா குருமூர்த்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.