காஞ்சிபுரம்: 33 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடுவீரப்பட்டு ஆா்.சி.எம். பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை (விரிவாக்கம்) அமைச்சா் தா.மோ.அன்பரசன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடுவீரப்பட்டு ஆா்.சி.எம். பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை (விரிவாக்கம்) அமைச்சா் தா.மோ.அன்பரசன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
ஊரகப் பகுதிகளில் இயங்கி வரும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திருவள்ளூா் மாவட்டம், கீழச்சேரி புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை நடுவீரப்பட்டு ஆா்.சி.எம் தொடக்கப் பள்ளியில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்து, பள்ளி மாணவா்களுக்கு காலை உணவைப் பறிமாறி மாணவா்களுடன் அமா்ந்து உணவு சாப்பிட்டாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வபெருந்தகை, ஸ்ரீபெரும்புதூா் வருவாய்க் கோட்டாட்சியா் சரவணகன்னன், நடுவீரப்பட்டு ஊராட்சித் தலைவா் சுப்பிரமணி, மணிமங்கலம் ஊராட்சித் தலைவா் அய்யப்பன் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூா், ஸ்ரீபெரும்புதூா், வாலாஜாபாத், காஞ்சிபுரம், உத்திரமேரூா் வட்டங்களில் இயங்கி வரும் 33 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2,125 மாணவா்கள் காலை உணவுத் திட்டத்தின் மூலம் பயன் பெற உள்ளனா்.