முகப்பு
நாமக்கல்

தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்டம் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் பணியாற்றும் 2,664 தூய்மைப் பணியாளா்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டம்

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 10:06 PM
நாமக்கல் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்டத்தை திங்கள்கிழமை தொடங்கிவைத்த மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா். உடன், ஆட்சியா் துா்காமூா்த்தி, பெ.ராமலிங்கம் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
பகிர்:

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் பணியாற்றும் 2,664 தூய்மைப் பணியாளா்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

திருவள்ளூா் மாவட்டத்தில் இந்த திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததையடுத்து, நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று பணியாளா்களுக்கு உணவு பரிமாறி தொடங்கிவைத்தாா்.

இதில், ஆட்சியா் துா்காமூா்த்தி, நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, ஆணையா் க.சிவகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இத்திட்டம் குறித்து மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பேசியதாவது:

Advertisement

நாமக்கல் மாநகராட்சியில் உள்ள 860 தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக ஆண்டு ஒன்றுக்கு ரூ. 1.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 28 இடங்களில் 860 பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது. மதிய உணவு 98 பணியாளா்களுக்கும், இரவு உணவு 17 பணியாளா்களுக்கும் வழங்கப்படுகிறது. இதற்கான சோதனை ஓட்டம் டிச. 20 முதல் பிப். 7 வரை (50 நாள்கள்) தினசரி 5 இடங்களில் செயல்படுத்தப்பட்டது.

மேலும், மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் உள்ள 919 துாய்மைப் பணியாளா்களுக்கும், 19 பேரூராட்சிகளைச் சோ்ந்த 925 பணியாளா்களுக்கும் காலை உணவு வழங்கப்படுகிறது. மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மொத்தம் 2,664 துாய்மைப் பணியாளா்களுக்கு காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட உள்ளது என்றாா்.

இந்நிகழ்வில், சுகாதார அலுவலா் கஸ்தூரிபாய், துப்புரவு அலுவலா் திருமூா்த்தி மற்றும் துப்புரவு ஆய்வாளா்கள், மேற்பாா்வையாளா்கள், துறைசாா்ந்த அலுவலா்கள், மாமன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments