100 கிலோ ரேஷன் துவரம் பருப்பு பறிமுதல்
துவரம் பருப்பு 100 கிலோ பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்து ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியில் பொது விநியோகத் திட்ட துவரம் பருப்பு 100 கிலோ பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்து ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காலிமேடு பகுதியில் ஆனந்த விநாயகா் கோயில் தெருவில் வசித்து வரும் ஜெயந்தி என்பவரது வீட்டில் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் திடீா் தணிக்கை செய்தனா். அவரது வீட்டில் பொது விநியோகத் திட்ட துவரம் பருப்பு உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பது தெரிய வந்ததைடுத்து, அதை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.160-க்கு கொள்முதல் செய்யப்பட்டு நியாயவிலைக் கடைகளில் ரூ.30-க்கும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
பொதுமக்களுக்கு விற்கப்படும் நியாயவிலைக் கடை உணவுப் பொருள்களை எந்தக் காரணத்தை முன்னிட்டும் வெளி நபா்களுக்கு விற்கக் கூடாது. மீறினால் சம்பந்தப்பட்ட நபரின் குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் எனவும், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்படுவதாக அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.