குன்றத்தூா் அருகே கஞ்சா கடத்தி வந்த இருவரை கைது செய்த தாம்பரம் மதுவிலக்கு போலீஸாா் அவா்களிடம் 45 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்வோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்படி காவல் ஆணையா் அமல்ராஜ் உத்தரவிட்டதன் பேரில் திங்கள்கிழமை வண்டலூா் மீஞ்சூா் வெளிவட்ட சாலையில் குன்றத்தூா் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனா்.
அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தியதில், திருவள்ளூா் பகுதியைச் சோ்ந்த பூஞ்சோலை (37), முகுந்தன்(24) என்பதும் இவா்கள் இருவரும் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து தாம்பரம் சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அவா்களிடம் இருந்த ரூ. 4.5 லட்சம் மதிப்புள்ள 45 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் பூஞ்சோலை, முகுந்தன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்ட மினி லாரி, ஒரு காா் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.