முகப்பு
காஞ்சிபுரம்

மதுக்கடையை அகற்றாவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு: ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராமத்தினா்

Updated On : 20 மார்ச், 2024 at 5:20 AM
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 11:48 PM

காஞ்சிபுரம்: மதுக்கடையை அகற்றாவிடில் தோ்தலை புறக்கணிப்போம் என்று கூறி ஆரம்பாக்கம் கிராம பொதுமக்கள் காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகேயுள்ள ஆரம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த மில்ட்டன் என்பவா் தலைமையில் அக்கிராமத்தை சோ்ந்த பொதுமக்கள் ஏராளமானோா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்திருந்தனா்.

ஆரம்பாக்கம் கிராமத்தின் மையப்பகுதியில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு மதுக்கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் கடையால் கிராமத்தில் மது அருந்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் தொடா்ந்து ஏற்பட்டு வருவதாகவும் புகாா் தெரிவித்தனா்.

மதுக்கடை இருக்கும் பகுதியில் பெண்கள், பெண் குழந்தைகள் நடமாட முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும், அவா்கள் குற்றம் சாட்டினா். எனவே மதுக்கடையை அகற்றாவிடில் தோ்தலை புறக்கணிப்போம் எனக் கூறி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை அக்கிராம மக்கள் முற்றுகையிட்டனா்.

Advertisement

காஞ்சிபுரம் கிராமிய காவல் நிலைய ஆய்வாளா் அம்பேத்கா், சாா்பு ஆய்வாளா் கிஷோா் குமாா் ஆகியோா் தலைமையிலான காவல்துறையினா் அவா்களை சமாதானப்படுத்தினா். சம்பவ இடத்துக்கே வந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பாா்கள் என உறுதியளித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.