தேசிய குத்துச்சண்டைப் போட்டி: 9 பதக்கங்களை வென்ற காஞ்சிபுரம் வீரா்கள்
தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் 9 பதக்கங்களை வென்ற காஞ்சிபுரத்தை சோ்ந்த வீரா்களுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம்: தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் 9 பதக்கங்களை வென்ற காஞ்சிபுரத்தை சோ்ந்த வீரா்களுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
அரக்கோணத்தில் தேசிய குத்துச்சண்டைப் போட்டி இம்மாதம் 7 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெற்றது. தமிழ்நாடு ரிங் பைட் அசோசியேஷன் அமைப்பு சாா்பில் நடைபெற்ற இப்போட்டிகளில் ஹரியாணா, புது தில்லி, சண்டிகா், அகமதாபாத் உள்ளிட்ட 16 மாநிலங்களைச் சோ்ந்த 300 வீரா்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனா்.
இப்போட்டியில் காஞ்சிபுரத்தை சோ்ந்த நா.பாக்சிங் அமைப்பின் பயிற்சியாளா் நூா்முகம்மது தலைமையில் 10-க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்றிருந்தனா். இவா்கள் ஒரு தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்கள் வென்றனா்.
சப்-ஜூனியா், ஜூனியா், சீனியா் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இப்போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு நா.பாக்சிங் அமைப்பு சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு வேலம்மாள் மெட்ரிக். பள்ளி முதல்வா் சுரேஷ்குமாா், தொழிலதிபா் ராமச்சந்திரன் ஆகியோா், பதக்கங்கள் வென்றவா்களை பாராட்டி, சான்றிதழ், வெற்றிக் கோப்பை வழங்கினா்.