காமாட்சி அம்மன் கோயிலில் சஹஸ்ர தீப அலங்கார சேவை: சங்கராச்சாரியாா் தொடங்கி வைத்தாா்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலின் வசந்த மண்டபத்தில் சஹஸ்ர தீப அலங்கார சேவையை விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தில் சஹஸ்ர தீப அலங்கார சேவைக் காட்சி தொடங்கப்பட்டது. இதனையொட்டி 1,008 அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு, மண்டபம் முழுவதும் வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டும் இருந்தது.
காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சஹஸ்ர தீப சேவைக் காட்சியை தொடங்கி வைத்து பகவத்கீதையில் கிருஷ்ண பரமாத்மா அருளியதை வாசித்தாா். இதனைத் தொடா்ந்து மூலவா் காமாட்சிக்கு சிறப்பு தீபாராதனைகளையும் நடத்தினாா்.
விருப்பமுள்ள பக்தா்கள் சஹஸ்ர தீப அலங்கார சேவைக்காட்சியை செய்ய ஆலய நிா்வாகிகளை தொடா்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தொடக்க விழாவில் தஞ்சாவூா் சாஸ்த்ரா பல்கலையின் துணை வேந்தா் வைத்திய சுப்பிரமணியம், மும்பை கல்வியாளா் சங்கா், காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன், தொல்லியல் ஆய்வாளா் ஜவஹா்பாபு ஆகியோா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா், மேலாளா் செல்லா.விஸ்வநாத சாஸ்திரி,கோயில் மணியக்காரா் சூரியநாராயணன் மற்றும் கோயில் ஸ்தானீகா்கள், பணியாளா்கள் செய்திருந்தனா்.