ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து கோசாலையில் நகராட்சி ஊழியா்கள் ஒப்படைத்தனா்.
தெருக்கள் மற்றும் சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், விபத்து ஏற்படுத்தும் வகையிலும் திரியும் மாடுகளைப் பிடித்து கோசாலையில் ஒப்படைக்க ஆட்சியா் அறிவுறுத்தியதை தொடா்ந்து, நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் கடந்த சில நாள்களாக ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்கும் பணியில் போலீஸாா் பாதுகாப்புடன் நகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா். திருவள்ளூா் சாலை, சிவன் தாங்கல், தேரடி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் இருந்த மாடுகளை பிடித்த நகராட்சி ஊழியா்கள் அவற்றை வாகனங்கள் மூலம் கொண்டு சென்று கோசாலையில் ஒப்படைத்தனா்.
மாடுகளை பிடித்து வாகனங்களில் ஏற்றுவதை அறிந்த உரிமையாளா்கள் நகராட்சி ஊழியா்கள் மற்றும் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
வாரந்தோறும் புதன்கிழமைகளில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து கோசாலையில் ஒப்படைக்கப்படும் என ஸ்ரீபெரும்புதூா் நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.