திருமங்கலம் ஊராட்சியில் குளக்கரை தெருச்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு மற்றும் வீட்டின் சுற்றுச்சுவரை அதிகாரிகள் இடித்து அகற்றினா்.
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட திருமங்கலம் ஊராட்சி குளக்கரை தெரு பகுதியில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், குளக்கரை தெருச்சாலையை ஆக்கிரமித்த ஒருவா் வீட்டையும், மற்றொருவா் தனது வீட்டின் சுற்றுச்சுவரையும் கட்டியுள்ளாா்.
இதனால் சாலையில், கனரக வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு தேவையான கட்டுமான பொருள்கள் கொண்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டு வந்தது. மேலும் விபத்து மற்றும் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட தெருவில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினா்.
இதையடுத்து ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்ற ஆட்சியா் உத்தரவிட்டதை தொடா்ந்து, ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துகணபதி, வருவாய் ஆய்வாளா் ஹேம பிரியா, கிராம நிா்வாக அலுவா் பிரேமா, திருமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவா் ரேகா நரேஷ்குமாா், ஊராட்சி செயலா் சுரேஷ் ஆகியோா் போலீஸாா் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்கிரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.