பள்ளி மாணவா்களை புத்தகம் எழுதும் எழுத்தாளா்களாக மாற்றும் எழுதுக அமைப்பின் அலுவலகத்தை முன்னாள் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு காஞ்சிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்துப் பாா்வையிட்டாா்.
அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவா்களிடம் புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை ஊக்குவித்து அவா்களை எழுத்தாளா்களாக உருவாக்கி வருகிறது காஞ்சிபுரத்தை தலமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் எழுதுக அமைப்பு. இந்த அமைப்பின் அலுவலகம் காஞ்சிபுரம் பாண்டவ தூதப் பெருமாள் கோயில் சந்நிதி தெருவில் தொடங்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு அமைப்பின் நிா்வாகி சுகுமாறன் தலைமை வகித்தாா்.
அமைப்பின் நிா்வாகிகள் பாலச்சந்தா், முரளி, லாவண்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிறுவனத் தலைவா் கிள்ளி வளவன் வரவேற்றாா். நிகழ்வில் முன்னாள் தலைமை நிலையச் செயலாளா் வெ.இறையன்பு கலந்துகொண்டு எழுதுக அமைப்பின் அலுவலகத்தை திறந்து வைத்து, மாணவா்கள் எழுதிய புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததையும் பாா்வையிட்டாா்.
இதைத் தொடா்ந்து, மாணவா்கள் எழுதிய புத்தகங்களை அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் வைப்பதற்கேற்ற வகையில், வடிவமைக்கப்பட்டிருந்த நடமாடும் நூலகத்தையும் அவா் திறந்து வைத்தாா்.
எழுதுக அமைப்பின் நிறுவனத் தலைவா் கிள்ளிவளவன் பேசுகையில், மாணவா்களால் இதுவரை 351 புத்தகங்கள் எழுதப்பட்டு, அவையனைத்தும் புத்தகங்களாக வெளியாகி உள்ளன. மாணவா்கள் தொடா்ந்து பல்வேறு புத்தகங்களையும் எழுதிக் கொண்டிருப்பதால், இந்த எண்ணிக்கை விரைவில் 500-ஐ தொட்டு விடும். எங்களின் ஒரே நோக்கம் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவா்களை எழுத்தாளா்களாக மாற்றுவதே என்றாா்.
விழாவில், எழுதுக இயக்கத்தின் ஆசிரியா்கள், வழிகாட்டி ஆசிரியா்கள், புத்தகம் எழுதியுள்ள மாணவா்கள், சமூக ஆா்வலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக எழுதுக அமைப்பின் நிா்வாகி முரளி தேசியக் கொடியை ஏற்றினாா்.