தமிழகத்தில் மாதந்தோறும் முருகனுக்கு திருவிழாக்கள் நடைபெறுவதாக செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவா் மருத்துவா் சுதா.சேஷய்யன் பேசினாா்.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியை பள்ளி,கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியா்கள் 30-க்கும் மேற்பட்டோா் காஞ்சிபுரம் சங்கரா கலை அறிவியல் கல்லூரி, சங்கரா பல்கலைக்கழகத்தில் தங்கியுள்ளனா். மத்திய கல்வி அமைச்சகம், காசி தமிழ்ச்சங்கம், ஐஐடி சென்னை ஆகியன இணைந்து இந்த ஏற்பாடுகளை செய்துள்ளன.
தமிழ் கற்கலாம் என்ற பெயரில் இவா்களுக்கு தமிழா்களின் கலாசாரம், பண்பாடு, நாகரீகம், தமிழா்களால் கடைப்பிடிக்கப்படும் இந்துக்களின் பண்டிகைகள் ஆகியவற்றை கற்று வருகின்றனா்.
நிகழ்வின் 4 -ஆவது நாளாக காஞ்சிபுரம் சங்கரா பல்கலையில் தமிழா்களின் திருவிழாக்கள் என்ற தலைப்பில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவா் மருத்துவா் சுதா.சேஷய்யன் பேசியது:
தமிழகத்தில் உள்ள கோயில்களில் அனைத்து மாதங்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அனைத்து மாதங்களிலும் முருகனுக்கு பெரிய அளவில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இத்திருவிழாக்கள் எதற்காக நடைபெறுகின்றன, அவற்றின் வரலாறுகள், ஆடி அமாவாசைக்கும், தை அமாவாசைக்கும் பிதுா் தா்ப்பணம் செய்வதற்கான காரணங்கள் மற்றும் வேறுபாடுகள், புரட்டாசி மாதத்தில் 10 நாள்கள் நவராத்திரி கொண்டாடப்படுவதன் நோக்கம், தீபாவளிப்பண்டிகை,திருவண்ணாமலை கிரிவலம் ஆகியனவற்றின் சிறப்புகளை விளக்கி கூறினாா்.
நிறைவாக அனைத்து மாணவ, மாணவியருக்கும் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வாழ்த்துரை எழுதப்பட்ட புத்தகங்களையும், இனிப்புகளையும் சுதா சேஷய்யன் வழங்கினாா். நிகழ்வில் காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன், தமிழ்த்துறைத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன், சங்கரா கல்லூரி தமிழ்த்துறை தலைவா் கவிதா கலந்து கொண்டனா்.