காஞ்சிபுரம் அருகே வெள்ளகேட் பகுதியில் புதன்கிழமை இரவு கார் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த தம்பதியரில் கணவர் கண் முன்பாக மனைவி உயிரிழந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த பிரவீன் மற்றும் பிங்கி தம்பதியர் அவர்களது காரில் பெங்களூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடச் சென்றுள்ளனர்.சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் காஞ்சிபுரம் அருகே வெள்ளகேட் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென டேங்கர் லாரி குறுக்கே வேகமாக வந்த நிலையில் லாரி மீது பிரவீன் ஓட்டிச்சென்ற கார் லேசாக மோதியது. காரை பின் தொடர்ந்து அதிவேகமாக வந்த சென்னையிலிருந்து தர்மபுரி நோக்கிச் சென்ற அரசுப்பேருந்து கார் மீது வேகமாக மோதியதில் டேங்கர் லாரிக்கும், அரசுப்பேருந்துக்கும் இடையே கார் சுக்கு நூறாக நொறுங்கியது.
பிரவீன் சாதுர்யமாக காருக்குள்ளிருந்து வெளியே வந்த நிலையில் அவரது மனைவி பிங்கி சுக்கு நூறாக நொறுங்கிய காருக்குள் சிக்கி உயிரிழந்தார். இத்தகவல் தீயணைப்புத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பிங்கியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக சென்னை}பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கிரேன் உதவியுடன் போலீஸார் லாரியையும், அரசுப் பேருந்தையும் அப்புறப்படுத்திய பிறகு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பாக பொன்னேரிக்கரை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசுப்பேருந்தை தினக்கூலி அடிப்படையில் பணிபுரிபவர்கள் இயக்கி வந்ததன் விளைவாகவே இக்கோர விபத்து நிகழ்ந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.