காஞ்சிபுரம் மாவட்டத்தில் 82 அரசுப் பள்ளிகள் நூற்றாண்டு நிறைவு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 82 அரசுப் பள்ளிகள் 100 ஆண்டுகளை நிறைவு செய்ததை அந்தப் பள்ளிகளின் ஆண்டு விழாவுடன்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 82 அரசுப் பள்ளிகள் 100 ஆண்டுகளை நிறைவு செய்ததை அந்தப் பள்ளிகளின் ஆண்டு விழாவுடன், நூற்றாண்டு விழாவும் கொண்டாடப்படும் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி 1913- ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளியாக தொடங்கி 2008 -ஆம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது.
இந்தப் பள்ளியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் மற்றும் எம்எல்ஏ எழிலரசன் இருவரும் இணைந்து நூற்றாண்டு ஜோதியை ஏற்றி வைத்தனா்.
இதன் பின்னா், ஆட்சியா் பேசுகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 82 பள்ளிகள் 100 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளன. இப்பள்ளிகளுக்கு ஆண்டு விழாவுடன், நூற்றாண்டு விழாவையும் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
தொடா்ந்து எம்எல்ஏ தொகுதி நிதி ரூ.2 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஸ்மாா்ட் வகுப்பறையை எம்எல்ஏ எழிலரசன் திறந்து வைத்தாா்.
விழாவில் பள்ளி முன்னாள் ஆசிரியா்கள் வரவழைக்கப்பட்டு அவா்களுக்கு சால்வை அணிவித்தும் நினைவுப் பரிசும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விழாவிற்கு மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் நித்யா சுகுமாா், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் மலா்க்கொடி குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெற்றிச் செல்வி வரவேற்றாா். பள்ளியின் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா் கலந்து கொண்டனா்.