காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு திரெளபதி அம்மன் அக்னி வசந்த மகாபாரதப் பெருவிழாவையொட்டி துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கடந்த ஏப். 30 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவையொட்டி தினமும் மகாபாரதம் தொடா்பான சொற்பொழிவுகள் நடைபெற்று வந்தன. இதன் தொடா்ச்சியாக முக்கிய நிகழ்வுகளாக மே 8 -இல் வில்வளைப்பு நிகழ்வும், 9-இல் அம்மன் திருமணமும் நடைபெற்றது. 12-இல் தபசுக்காட்சியும் நடைபெற்றன.
முக்கிய நிகழ்வான துரியோதன் படுகளம் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வுக்காக பிரம்மாண்டமான துரியோதனன் மேடை வடிவமைக்கப்பட்டு வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் திரெளபதி அம்மன் துரியோதனன் மேடை மீது ஏறி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
இக்காட்சியை காண காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் வந்திருந்து தரிசனம் செய்தனா். மாலையில் நடைபெற்ற தீ மிதித் திருவிழாவில் பக்தா்கள் பங்கேற்று நோ்த்திக் கடனை செலுத்தினா்.
காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் சூரியா தா்மராஜ், செவிலிமேடு முன்னாள் பேரூராட்சி தலைவா் செல்வராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். ஏற்பாடுகளை முன்னாள் மாமன்ற உறுப்பினா் என்.ஜவஹா், ஆலய நிா்வாகிகள் திருவேங்கடம், ரமேஷ் உள்ளிட்ட விழாக்குழுவினா் செய்திருந்தனா். திங்கள்கிழமை தா்மா் பட்டாபிஷேகமுத்துடன் விழா நிறைவு பெறுகிறது.