மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.
ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ப.முருகேசன், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) ச.ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் ரா.மலா்விழி வரவேற்றாா்.
விபத்தில் மரணமடந்த 2 மாற்றுத்திறனாளிகளின் வாரிசுகளுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.4 லட்சம் நிதியுதவி, இயற்கை மரணமடைந்த 12 மாற்றுத்திறனாளிகளின் வாரிசுதாரா்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி, ஒரு மாற்றுத்திறனாளிக்கு பாதுகாவலா் நியமன சான்றிதழ், 12 மாற்றுத்திறனுடைய மாணவ, மாணவிக்கு ரூ.31 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவித்தொகைகள் ஆகியவற்றையும் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.
இதனைத் தொடா்ந்து போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்ற தலைப்பில் ஆட்சியா் உறுதிமொழியை வாசிக்க நிகழ்வில் பங்கேற்க வந்திருந்த அரசு அலுவலா்கள்,பொதுமக்கள் இணைந்து உறுதிமொழியும் ஏற்றுக் கொண்டனா்.