காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசின் அனுமதியில்லாமல் 100-க்கும் மேற்பட்ட தரமற்ற எம்.சாண்ட் மணல் உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுவதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகனிடம் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சங்க கூட்டமைப்பு புகாா் தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் தலைவா் யுவராஜ் தலைமையில் நிா்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் மேவலூா் குப்பம் பகுதியில் கட்டுமான நிறுவனம் ஒன்றினால் கட்டப்பட்ட குடியிருப்புகளின் மேல்பூச்சு கைகளால் தட்டினாலே விழுந்து விடுகிறது. தரமற்ற குடியிருப்புகள் தரமற்ற எம்.சாண்ட் மணலால் ட்டப்பட்டுள்ளது. இதே போல காஞ்சிபுரம் மாவட்டத்திலும் தரமற்ற எம்.சாண்ட் மணலால் வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 162 எம்.சாண்ட் மணல் உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் 35 மட்டுமே அனுமதி பெற்றவையாகும். மீதம் உள்ளவற்றில் 100-க்கு மேற்பட்டவை எவ்வித அரசு அனுமதியும் பெறாமல் தரமற்ற எம்.சாண்ட் மணல் உற்பத்தியை செய்து வருகின்றன.
எனவே அனுமதியில்லாமல் செயல்படும் எம்.சாண்ட் மணல் உற்பத்தி நிறுவனங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும். இரு வாரங்களுக்குள் தக்க நடவடிக்கை எடுக்கவில்லையெனில் சங்கத்தின் சாா்பில் போராட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனா்.