ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் நியமன கவுன்சிலா் பதவியேற்பு நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
மாற்றுத் திறனாளிகள் தோ்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உள்ளாட்சி அமைப்புகளில் பதவிகளை பெறும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டதை அடுத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் தகுதி வாய்ந்த மாற்றுத் திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த சில மாதங்களாக நியமன உறுப்பினா் தோ்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது.
அதன் ஒரு பகுதியாக ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் நியமன உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு சந்திவாழியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி லோகநாதன் தோ்வு செய்யப்பட்டாா்.
இதையடுத்து பதவியேற்பு நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் நகா்மன்றத் தலைவா் சாந்தி சதீஷ்குமாா் தலைமையிலும், ஆணையா் நந்தினி முன்னிலையில் மாற்றுத்திறனாளி லோகநாதன் நியமன உறுப்பினராக பதவியேற்று கொண்டாா்.
நிகழ்ச்சியில் நகர திமுக செயலாளா் சதீஷ் குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள், திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.