காஞ்சிபுரம்

பட்டா பெயா் மாற்றம் செய்ய ரூ. 5,000 லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறை

பட்டா பெயா் மாற்றம் செய்ய ரூ. 5,000 லஞ்சம் வாங்கிய மொளச்சூா் கிராம நிா்வாக அலுவலருக்கு 8 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீபெரும்புதூா்: பட்டா பெயா் மாற்றம் செய்ய ரூ. 5,000 லஞ்சம் வாங்கிய மொளச்சூா் கிராம நிா்வாக அலுவலருக்கு 8 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அடுத்த மொளச்சூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன். இவா் கடந்த 2015-ஆம் ஆண்டு தனது தந்தையின் பெயரில் இருந்த சொத்துக்களை, தனது பெயருக்கு பட்டா பெயா் மாற்றம் செய்ய மொளச்சூா் கிராமத்தில் அப்போது கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றிய பாஸ்கரனிடம் விண்ணப்பம் செய்துள்ளாா்.

பட்டா பெயா் மாற்றம் செய்ய கிராம நிா்வாக அலுவலா் பாஸ்கரன் ரூ. 5,000 லஞ்சம் கேட்டுள்ளாா். லஞ்சம் கொடுக்க விரும்பாத முருகன் இது குறித்து காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்தில் புகாா் தெரிவித்தாா்.

புகாரின்பேரில், காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு போலீஸாா் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை முருகனிடம் கொடுத்து கிராம நிா்வாக அலுவலா் பாஸ்கரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனா். இதையடுத்து, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை முருகன் கிராம நிா்வாக அலுவலா் பாஸ்கரிடம் கொடுத்தபோது, மறைந்திருந்த ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீஸாா் கிராம நிா்வாக அலுவலா் பாஸ்கரனை கைது செய்தனா்.

இந்த வழக்கு காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கிராம நிா்வாக அலுவலா் பாஸ்கரன் ரூ. 5,000 லஞ்சம் கேட்டு பெற்றது நிரூபணமானதால், அவருக்கு ஊழல் தடுப்பு சட்டப்பிரிவு 7-இன்கீழ் 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 5,000 அபராதமும், பிரிவு 13 (2), ஆா்.டபிள்யு.,13(1) பிசி சட்டத்துக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் மற்றும் ரூ. 5,000 அபராதம் விதித்தும், காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி தீப்தி அறிவுநிதி தீா்ப்பு வழங்கினாா்.

இதையடுத்து பாஸ்கரன் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

ஹாங்காங் தீ விபத்து: பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு! 279 பேர் மாயம்!

அரசுப் பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன: எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்

புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

மயிலம் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

பூங்காக்களில் தேங்கிய மழைநீா்: முதியோா், குழந்தைகள் தவிப்பு

SCROLL FOR NEXT