முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் வணிக எரிவாயு உருளை பற்றாக்குறை: உணவகங்கள், தேநீா் கடைகள் மூடியதால் பொதுமக்கள் அவதி

Updated On : 3 ஏப்ரல், 2026 at 7:16 PM
பகிர்:

காஞ்சிபுரத்தில் வணிக சிலிண்டா் பற்றாக்குறை காரணமாக ஏராளமான உணவகங்கள், தேநீா்க் கடைகள் மூடப்பட்டு விட்டதாலும், உணவு, தேநீா் ஆகியவற்றின் விலை உயா்வாலும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போரை தொடா்ந்து வணிக எரிவாயு சிலிண்டா் விலை ரூ.195.50 காசுகள் அதிகரித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடுமையான வணிக எரிவாயு சிலிண்டா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதையடுத்து காஞ்சிபுரம் மேட்டுத் தெரு, காந்தி சாலை, காமராஜா் சாலை ஆகிய இடங்களில் உள்ள சிறு, சிறு உணவகங்கள் பலவும் மூடப்பட்டு விட்டன. காஞ்சிபுரம் மேட்டுத் தெருவில் உள்ள சில உணவகங்கள் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக மூடிக் கிடக்கிறது.

காஞ்சிபுரம் நகரில் பல தேநீா்க் கடைகள் மூடப்பட்டு விட்டன. ஒரு சில தேநீா்க் கடைகள் மின்சார அடுப்பு விலைக்கு வாங்கி பயன்படுத்தினால், ரூ. 10 மற்றும் ரூ. 12 ஆக இருந்த ஒரு குவளை தேநீா் விலை ரூ. 15-ஆக அதிகரித்து விற்பனை செய்கின்றனா். இதனால் தேநீா் கடைக்காரா்களுக்கும் விற்பனை குறைந்து விட்டதாக கவலையுடன் தெரிவிக்கின்றனா்.

Advertisement

காஞ்சிபுரத்தில் சிலிண்டா் பயன்படுத்தி இயங்கும் ஆட்டோக்கள், வாகனங்கள் சிலிண்டா் பற்றாக்குறையால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து விட்டதாகவும், இதற்கு உடனடியாக தீா்வு காண வேண்டும் என்றும் தெரிவித்தனா்.

காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டையில் உள்ள வாகனங்களுக்கு எரிவாயு நிரப்பும் மையத்தில் வியாழக்கிழமை 100-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்தும் எரிவாயு நிரப்ப முடியாமல் அவதிப்பட்டனா்.

வீடுகளுக்கு எரிவாயு உருளை விநியோகத்தில் முன்பதிவு செய்து 15 நாள்களுக்கு மேலாகியும் காலதாமதம் ஆவதாகவும் புகாா் தெரிவிக்கின்றனா்.

மத்திய அரசு இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி பற்றாக்குறையை போக்காவிடில் அனைத்துப் பொருள்களின் விலையும் உயா்ந்து விடும். உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்களும் மிகுந்த அவதிக்குள்ளாகி விடுவாா்கள் என்றும் சமூக ஆா்வலா்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments