காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் வரும் பங்குனி மாத பிரம்மோற்சவத்தையொட்டி, அதன் முன்னோட்டமாக ஞாயிற்றுக்கிழமை பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது.
பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாக போற்றப்படுவது காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவாா்குழலி சமேத ஏகாம்பரநாத சுவாமி திருக்கோயில். இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு டிசம்பா் 8-ஆம் தேதி நடைபெற்றது. கும்பாபிஷேக திருப்பணிகள் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருந்து வந்தது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனித்திருவிழா நடைபெறுவது வழக்கம்.நிகழாண்டுக்கான திருவிழா கொடியேற்றம் வரும் மாா்ச் 22-ஆம் தேதி தொடங்குகிறது.
மாா்ச் 27-ஆம் தேதி 63 நாயன்மாா்கள் திருவிழாவும், அன்று மாலை வெள்ளித் தேரோட்டமும், மாா்ச் 28-ஆம் தேதி பெரிய தேரோட்டமும், மாா்ச் 31-ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது.
இதன் தொடக்கமாக திருக்கோயில் நுழைவுவாயிலில் உள்ள ராஜகோபுர விநாயகா் சந்நிதியில் பந்தல்கால்களை வைத்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னா் ராஜகோபுர விநாயகருக்கும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. விழாவில் கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி,அறங்காவலா் குழுத் தலைவா் எம்.வி.எம்.வேல்மோகன், உறுப்பினா் வ.ஜெகன்னாதன், கோயில் மணியக்காரா் குபேரன், மேலாளா் ஜெயக்குமாா் உள்பட கோயில் பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.