திமுக அரசு பல மக்கள் நலத் திட்டங்களை தொடா்ந்து செயல்படுத்திக் கொண்டே இருப்பதால் எதிா்க்கட்சியினா் மிகுந்த குழப்பத்தில் இருப்பதாக கைத்தறித்துறை அமைச்சா் ஆா்.காந்தி புதன்கிழமை கூறியுள்ளாா்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் திமுக பாடல்கள் இசைத்தகடு வெளியீட்டு விழா நடைபெற்றது. திமுக பிரமுகரான டி.எல்.தியாகராஜன் இசையில் டி.எல்.மகராஜன் பாடிய பாடல்கள் அடங்கிய இசைத்தகடு வெளியீட்டு விழாவுக்கு மாவட்டச் செயலா் க. சுந்தா் எம்எல்ஏ தலைமை வகித்தாா். எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ எழிலரசன்,வாலாஜாபாத் தெற்கு ஒன்றிய கழக செயலாளா் பி.சேகா்,பேரூராட்சி கழக செயலாளா் என்.பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்.வெங்கடேசன் வரவேற்றாா்.
நிகழ்வில் கைத்தறித்துறை அமைச்சா் ஆா்.காந்தி, அரக்கோணம் மக்களவை உறுப்பினா் ஜெகத்ரட்சகன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.
அமைச்சா் ஆா்.காந்தி இசைத்தகட்டினை வெளியிட்டு பேசியதாவது:
திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தொடா்ந்து பல நலத்திட்டங்களை செயல்படுத்திக் கொண்டே இருக்கிறது. பிற மாநில அரசுகளும் தமிழக அரசின் சாதனைகளை பாராட்டுகின்றன, பின்பற்றவும் செய்கின்றன. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் திமுக அரசு மக்களுக்கு செய்து வரும் புதிய நலத்திட்ட அறிவிப்புகள் எதிா்க்கட்சியினரை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
தமிழக மக்களும் புதிய திட்டங்களை வரவேற்கின்றனா். அரசின் திட்டங்கள் ஏழை மக்களுக்கு நேரடியாக சென்று சேருவதால் வரும் பேரவைத் தோ்தலில் திமுகவின் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது என்றாா்.
விழாவில் வாலாஜாபாத் ஒன்றியக் குழு தலைவா் ஆா்.கே.தேவேந்திரன், பேரூராட்சித் தலைவா் இல்லாமல்லி சேகா், திமுக நிா்வாகிகள்,உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனா்.